தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

அஞ்சலி செலுத்த வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
Published on

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சட்டம், ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி அஞ்சலி செலுத்த வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏசி, சைக்கிள் போன்றவற்றில் வர அனுமதி இல்லை.

சொந்த காரில் வருபவர்கள் வாகன எண், வாகன பதிவு சான்று, வாகன ஓட்டுனர் உரிமம், வாகனத்தில் பயணம் செய்வோர் விவரங்களை சம்பந்தப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் அளித்து, அனுமதி சீட்டு பெற்று வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். அனுமதி சீட்டு இல்லாத வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் அந்தந்த மாவட்டங்களில் அனுமதி பெற்று வர வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும்.

வாகன மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. ஆயுதங்கள் எடுத்து செல்லக்கூடாது. பட்டாசு வெடிக்கக்கூடாது. வாகனத்தில் ஒலி பெருக்கி பயன்படுத்தக்கூடாது. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் வரும்போது உடன் 3 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும். நடைபயணமாக அஞ்சலி செலுத்த வரக்கூடாது.

பரமக்குடி நகருக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழிதடங்களில் 1 கி.மீ. தொலைவிற்குள் மட்டுமே நடைபயணமாக செல்லலாம். ஜோதி, முளைப்பாரி, பால்குடம் ஆகியவற்றை நினைவிடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிற்குள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும்.

நினைவிடத்தில் தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் சார்பாக மட்டுமே கூட்டத்தை முறைப்படுத்த ஒரு ஒலிபெருக்கி மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்படும். நினைவிடத்திற்குள் தலைவர்கள் ஒலிபெருக்கியில் பேசுவதற்கு அனுமதி இல்லை. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வரை அளிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com