கோடையில் குடிநீருக்கு தவம் கிடக்கும் மருதமலை பழங்குடியின மக்கள்!

மலைப்பகுதியில் இருந்து வரும் ஊற்று நீரையே இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கோடையில் குடிநீருக்கு தவம் கிடக்கும் மருதமலை பழங்குடியின மக்கள்!
Published on: 

மருதமலை,

மருதமலை ஆண்டவர் வீதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ஆண்டாண்டு காலமாக குடிநீர் பிரச்சினை நீடித்து வருகிறது. கோடைக்காலத்தில் ஊற்று நீர் குறைந்துவிடுவதால், குடிநீருக்காக அலைந்து திரியும் அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

250 பேர் வசிக்கும் குடியிருப்பு

மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில், பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இந்த படிக்கட்டுகளுக்கு அருகில் மருதமலை ஆண்டவர் வீதி உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட 63 தொகுப்பு வீடுகள் உள்ளன. இதுதவிர குடிசை வீடுகளும் அமைந்துள்ளன. இவற்றில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 250 பேர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு அரசு மற்றும் வனத்துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தாலும், குடிநீர் பிரச்சினைக்கு மட்டும் இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை.

ஊற்று நீரே ஒரே ஆதாரம்

மலைப்பகுதியில் இருந்து வரும் ஊற்று நீரையே இப்பகுதி மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் ஊற்றில் தண்ணீர் அதிகமாக கிடைப்பதால், குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளித்து விடுகின்றனர்.

ஆனால், கோடைக்காலம் தொடங்கியதும் ஊற்றில் நீர்வரத்து குறைந்துவிடுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

5 ஆயிரம் லிட்டர் தொட்டி இருந்தும் பயனில்லை!

இதுகுறித்து அப்பகுதி மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

நாங்கள் பல தலைமுறைகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். எங்களது தண்ணீர் தேவையை மலைப்பகுதியில் இருந்து வரும் ஊற்று நீர்தான் பூர்த்தி செய்து வருகிறது. கோடைக்காலத்தில் ஊற்றில் தண்ணீர் குறைந்துவிடுவதால், தண்ணீரைத் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எங்கள் பகுதியில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பி, எங்களது தேவையைப் பூர்த்தி செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் எங்கள் பகுதிக்கு வந்து பார்வையிட்டு, உடனடியாக தண்ணீர் வசதி செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினர். ஆனாலும், எங்களது குடிநீர் பிரச்சினை தீரவில்லை.

தண்ணீருக்காக அடிவாரத்துக்கு செல்லும் அவலம்

கோவை மாநகராட்சி சார்பில் மருதமலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அந்த குழாயில் இருந்து எங்களுக்கும் தண்ணீர் வழங்குவதாகக் கூறினர்.

ஆனால், எங்கள் குடியிருப்பு அருகே அந்த குழாயில் இருந்து சில நேரங்களில் தண்ணீர் பிடித்தாலும், அதை அறிந்த சிலர் உடனடியாக தண்ணீர் வருவதை நிறுத்திவிடுகின்றனர். இதனால், சில சமயங்களில் தண்ணீர் பிடிப்பதற்காக மருதமலை அடிவாரத்துக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மழைக்காலத்தில் ஊற்று நீர் கிடைப்பதால் பெரிய அளவில் பிரச்சினை இருப்பதில்லை. ஆனால், கோடைக்காலத்தில் தண்ணீருக்காக கடுமையாகத் திண்டாட வேண்டியுள்ளது.

அதிகாரிகள் அவ்வப்போது எங்கள் பகுதிக்கு வந்து, தண்ணீர் வசதி செய்து கொடுப்பதாக உறுதி அளித்துச் செல்கின்றனர். ஆனால், இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, எங்களது அடிப்படைத் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com