மகளுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் கொத்தனார் தற்கொலை

தக்கலை அருகே மகளுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் கொத்தனார் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மகளுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் கொத்தனார் தற்கொலை
Published on

தக்கலை, 

தக்கலை அருகே மகளுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் கொத்தனார் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கொத்தனார்

தக்கலை அருகே உள்ள குழிக்கோடு வண்டாவிளையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57), கொத்தனார். இவருக்கு கலா(47) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.

இதில் இளைய மகள் அபிஷா கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ செலவை ராஜேந்திரன் கவனித்து வந்தார். மேலும், குழந்தையின் எடை குறைவாக இருந்ததால் சிகிச்சையின் செலவுக்கு பணம் அதிகமாக தேவைப்பட்டது.

இதனால், ராஜேந்திரன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கடன் வாங்கினார். ஆனால், பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறந்தது.

தற்கொலை

மகளின் பிரசவ செலவிற்காக ஏற்கனவே பலரிடம் கடன் வாங்கிய பிரச்சினை ஒரு பக்கம் இருக்க, குழந்தையும் இறந்து பிறந்தது அவரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வீட்டின் அருகில் உள்ள குடும்ப கல்லறை தோட்டத்தில் ராஜேந்திரன் திராவகத்தை குடித்துவிட்டு சத்தம் போட்டபடி கிடந்துள்ளார். இதை கண்ட மனைவி கலா மற்றும் உறவினர் ஹரிதாஸ் ஆகியோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதைகேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பின்னர், இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com