திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்-5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வருகின்றனர்
திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்-5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
Published on

திருச்செந்தூர், 

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரத் தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். மேலும், அய்யப்ப பக்தர்கள் சீசன் என்பதால் கூட்டம் அதிகரித்துள்ளது. மார்கழி மாதம் என்பதால் பாதயாத்திரை பக்தர்களின் வருகையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வருகின்றனர். அவர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி, நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் திருச்செந்தூர் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்த போதிய இட வசதிகள் இல்லாததால், பல இடங்களில் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நகர் பகுதி மக்கள் அவசர தேவைகளுக்குக் கூட வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com