

சென்னை,
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள தனியார் மருந்து குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை மேற்கு மாம்பலம், ஷாமளா வதனா தெருவில் ஒரு தனியார் மருந்து குடோன் இயங்கி வருகிறது. இன்று வழக்கம் போல் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது குடோனின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து மருந்துகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அங்கு இருந்ததால், தீ சில நிமிடங்களிலேயே குடோன் முழுவதும் வேகமாகப் பரவியது.
விபத்து குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். குடோனுக்குள் இருந்து கரும்புகை வெளியேறுவதால், தீயணைப்பு வீரர்கள் முகமூடி அணிந்து உள்ளே சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. எனினும், குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீயில் எரிந்து கருகி சாம்பலாகின.
அப்பகுதியில் உள்ள குறுகலான தெருக்கள் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் உள்ளே நுழைவதில் சற்று சிரமம் ஏற்பட்டன. இந்த தீ விபத்து குறித்து உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமோ என்ற பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், அடர்ந்த புகையும் சூழ்ந்து காணப்படுகிறது.