செங்கல்பட்டு அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை முற்றிலும் அணைத்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
Published on

செங்கல்பட்டு,

தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பிரிட்ஜ் வெடித்து திடீரென தீப்பற்றியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திடீர் தீ விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூரில் உள்ள 15 அடுக்குகளை கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் 11-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் பிரிட்ஜ் வெடித்து திடீரென தீப்பற்றியது.

அப்போது அந்த வீட்டில் குழந்தை உள்பட 4 பேர் இருந்துள்ளனர். தீப்பற்றியதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஒன்றுகூடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், வீட்டிற்குள் சிக்கியிருந்த 4 பேரையும் பொதுமக்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் தீ 13 மற்றும் 14 வது மாடிகளில் பரவ தொடங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுசேரி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை முற்றிலும் அணைத்தனர்.

ஒருவர் காயம்

இந்த தீ விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com