திசையன்விளை வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 150 கடைகள் கொண்ட மார்க்கெட் இயங்கி வருகிறது.
திசையன்விளை வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
Published on

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 150 கடைகள் கொண்ட மார்க்கெட் இயங்கி வருகிறது. இன்று வழக்கம்பேல் வாரச்சந்தை நடைபெற இருந்த நிலையில் அதிகாலை பேரூராட்சி சந்தையின் வெளிப்புறம் அமைந்துள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள், திடீரென சந்தையின் உள்புறம் இருந்து புகை மண்டலமாக வருவதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது சந்தை வடக்கு வாசல் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள பழக்கடை மற்றும் அதனை அடுத்துள்ள துணிக்கடை ஆகிய 2 கடைகளிலும் தீப்பிடித்து மளமளவென கொளுந்து விட்டு எரிந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தண்ணீரை வேகமாக அடித்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் திசையன்விளையை சேர்ந்த ராபர்ட் பாக்கியசீலன் (வயது 30) என்பவரின் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பழக்கடை, வாகனேரியை சேர்ந்த அன்னக்கிளி(48) என்பவரின் ரூ.5 லட்சம் மதிப்புள்ள துணிக்கடை மற்றும் தராசு, மர அலமாரி, தளவாடப் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com