

சென்னை
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சென்னையில் இந்தியா கூட்டணி நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் 13 கோடிக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. உரிய முறைகளின்படி இது நடத்தப்பட்டு உள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து உள்ளது.
எனினும், இதில் முறைகேடு நடந்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலகல் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று தொடங்கிய போராட்டத்தின்போது ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதன்பின்னர் இந்த போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சமீபத்தில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பிலும் போராட்டம் நடைபெற்றது.
இந்த சூழலில், எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் சென்னை எழும்பூரில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், த.வெ.க., வி.சி.க., ம.தி.மு.க., ஐ.யூ.எம்.எல்., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர், மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன், வைகோ, தொல்.திருமாவளவன், கே.எம். காதர் மொய்தீன், எம்.வீரபாண்டியன், பெ.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.