சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான்: அமைச்சர் ரமேஷ் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் இந்து அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்து அறநிலை துறை அமைச்சர் ரமேஷ்
Published on

திருநெல்வேலி,

இந்து அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

மாஸ்டர் பிளான்

திருநெல்வேலி மாவட்டம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் காரையாறு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பொன் சொரிமுத்து அய்யனார் கோவிலில், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் வரவிருக்கும் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பாக, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.

அடிப்படை வசதி

ஆய்வின் போது, கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், கழிவறை வசதிகள், ஆடைகள் மாற்றும் அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் உள்ளனவா என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தூய்மை பணிகளை முறையாக மேற்கொள்ளவும், ஆற்றில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆடி அமாவாசை திருவிழா

வரவிருக்கும் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான தங்கும் வசதிகள், போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம் மற்றும் வழிபாட்டு வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனும் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தி தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

உத்தரவு

மேலும், பொன் சொரிமுத்து அய்யனார் கோவிலை முழுமையான அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தும் வகையில், விரிவான மாஸ்டர் பிளான் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காப்புக்காடு பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலின் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக வனத்துறையுடன் கலந்தாலோசித்து, வனத்துறையின் அனுமதியுடன் பக்தர்களுக்கு சிறப்பான வழிபாட்டு தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com