சென்னையில் ரூ.40.42 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் உடற்பயிற்சிக் கூடம் - மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் உடற்பயிற்சிக் கூடத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.
சென்னையில் ரூ.40.42 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் உடற்பயிற்சிக் கூடம் - மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
Published on

சென்னை,

சென்னை அடையாறு மண்டலத்தில் ரூ.40.42 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் உடற்பயிற்சிக் கூடத்தினை திறந்து வைத்து, ரூ.12.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி, இன்று (04.02.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-170க்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

அவ்வாறாக, அடையாறு மண்டலம், பள்ளிப்பட்டு பிரதான சாலையில் மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, ரூ.40.42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகளிர் உடற்பயிற்சிக் கூடத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளிப்பட்டு பிரதான சாலையில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் உடற்பயிற்சிக் கூடத்திற்கும், ரூ.22.90 லட்சம் மதிப்பீட்டில் காந்தி மண்டபம் சாலை, அண்ணா நூற்றாண்டு நூலகம் எதிரில், பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியினையும் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

பின்னர், பொன்னியம்மன் கோவில் தெரு, அம்பாடி தெரு, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, கோட்டூர் கார்டன் 4-வது பிரதான சாலை விரிவு, நாயுடு தெரு, புது தெரு உள்ளிட்ட தெருக்களில் ரூ.2.84 கோடி மதிப்பீட்டில் 7.77 கி.மீ. நீளத்தில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் கோட்டூர்புரம் முதல் பிரதான சாலை, சூர்யா நகர், ராஜீவ் காந்தி அவென்யூ, பாரதி அவென்யூ, குருவப்பன் தெரு, சர்தார் பட்டேல் சால, கோட்டூர் 4-வது பிரதான சாலை விரிவு, லாக் தெரு சந்திப்பு உள்ளிட்ட பிரதான சாலைகளில் 5.71 கி.மீ. நீளத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, சித்ரா நகர், சென்னை தொடக்கப் பள்ளியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடப் பணியினை அமைச்சர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com