

சென்னை,
25-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) மன்ற கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். கூட்டத்தில் ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் வணிகர்கள் நமூனாக்கள் தாக்கல் செய்வதை எளிமைப்படுத்திடும் பொருட்டு, இது தொடர்பான குழுவின் பரிந்துரைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன.
மேலும், சட்டக்குழுவின் பரிந்துரைகளின்படி ஜி.எஸ்.டி. விதிகள் மற்றும் படிவங்களை திருத்துவது, சில படிவங்களை தாமதமாக தாக்கல் செய்யும் பட்சத்தில் அதற்காக விதிக்கப்படும் தாமத கட்டணத்தினைக் குறைப்பது, குறிப்பிட்ட சில படிவங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவினை நீட்டிப்பது, மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கு ரீ-பண்ட் வழங்குவதில் சம அதிகாரம் வழங்குவது தொடர்பான அறிவிக்கைக்கு திருத்தங்கள் போன்ற பல்வேறு பரிந்துரைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
வரி விகித மாற்றியமைப்பு
இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வைத்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
* ஜி.எஸ்.டி. வரி விகிதமானது மேலும் எளிமைப்படுத்திட வேண்டும்.
* கைவினைப் பொருட்களின் மீதான வரி விகிதமானது அந்த துறையைச் சார்ந்துள்ள பல்வேறு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
* ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியினை மாற்றியமைத்திட வேண்டும்.
* 23-வது மன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரி விகிதத்தை மாற்றியமைப்பது தொடர்பான ஏற்கனவே வைத்து நிலுவையில் உள்ள கோரிக்கைகள் மற்றும் தற்போது புதியதாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் என மொத்தம் 60-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.
வரியை குறைக்கவேண்டும்
* தமிழ்நாடு முன்வைத்து நிலுவையில் உள்ள வரிவிலக்கு தொடர்பான கோரிக்கை களான கைத்தறி மற்றும் விசைத்தறி பொருட்கள், ஜவ்வரிசி, தீப்பெட்டி, ஊறுகாய், வெண்ணெய், நெய், சானிடரி நாப்கின், விவசாயக் கருவிகள், ஜவுளித் தொழிலில் பயன்படும் எந்திர பாகங்கள், பம்பு செட்டுகள் மற்றும் சுருட்டு போன்றவைக்கும் விரைந்து முடிவெடுக்க வேண்டும்
* அன்றாட மக்களால் பயன்படுத்தப்படக்கூடிய அலுமினிய பாத்திரங்கள் மீதான வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், அலுமினிய மூலப் பொருட்கள் மீதான வரியை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகவும், அலுமினிய துணுக்குகள் மீதான வரியை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகவும் குறைத்திட வேண்டும்.
சிறு சேமிப்புகள்
* சாதாரண மக்கள் சீட்டு நிறுவனங்கள் மூலம் சிறு சேமிப்புகள் மேற்கொள்வதால், சிட்பண்ட் போர்மேன்களால் வழங்கப்படும் சேவைகள் மீதான வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்திட வேண்டும். பேக்கரி தயாரிப்பு பொருட்கள் மீதான வரியையும் குறைத்திட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி பேசினார்.
மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன.