மகப்பேறு உதவித்தொகை, ஊட்டச்சத்து பொருட்கள்

மகப்பேறு உதவித்தொகை, ஊட்டச்சத்து பொருட்கள் முறையாக கிடைக்கிறதா? என்பது குறித்து கர்ப்பிணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Published on

தமிழ்நாட்டில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் 2 வயது முதல் 6 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்காக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சத்துமாவு கலவைகள் வழங்கப்படுகின்றன.

சத்துமாவு கலவை

கோதுமை மாவு (45.50 கிராம்), வறுத்த கேழ்வரவு மாவு (6 கிராம்), செறிவூட்டப்பட்ட பாமாயில் எண்ணெய் (5 மி.லி.), முளைகட்டிய கேழ்வரகு மாவு (5 கிராம்), கொழுப்பு நீக்கப்படாத சோயா மாவு (10.50 கிராம்), வெல்லம் (27 கிராம்), தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் (1 கிராம்) ஆகிய 7 பொருட்கள் அடங்கிய சத்துமாவு கலவை தயாரிக்கப்பட்டு அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனையின் பேரில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்து மாவின் தரம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் வறுத்த கடலை மாவு (10 கிராம்), வறுத்த உளுந்தம் பருப்பு மாவு (5 கிராம்), வறுத்த வேர்க்கடலை மாவு (4 கிராம்) ஆகிய 3 மூலப்பொருட்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் கோதுமை, சோயா மாவு வறுத்து சேர்க்கப்பட்டு இருக்கிறது.

புது வடிவம்

2 வயது முதல் 6 வயது குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சத்துமாவும் புது வடிவம் பெற்றுள்ளது. இதில் வறுத்த கோதுமை மாவு, வெல்லத்தூள், வறுத்த சோயா மாவு, வறுத்த நிலக்கடலை மாவு, முளைக்கட்டிய கேழ்வரகு மாவு, தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் ஆகிய மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

முன்பு வெள்ளை நிறத்தில் இருந்த சத்துமாவு 'பாக்கெட்' தற்போது கலர்புல்லாக மாறி உள்ளது. என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன? என்பது எழுத்தாகவும், படமாகவும் 'பாக்கெட்' கவரில் பளிச்சென்று அச்சிடப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன ஊட்டச்சத்துகள் அடங்கி உள்ளன? என்ற விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 மாதத்துக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தையின் தாய்மார்களுக்கு சத்து டானிக், புரோட்டீன் பவுடர், நெய், பேரீச்சம் பழம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பெட்டகம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட இந்த ஊட்டச்சத்து திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 28-ந் தேதி தொடங்கிவைத்தார். இந்த ஊட்டச்சத்து பொருட்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்க வேண்டும் என்று அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

அதன்படி வீடு தேடி இந்த பொருட்கள் வருகிறதா? உதவித்தொகை முறையாக கிடைக்கிறதா? என்பவை பற்றி கர்ப்பிணி பெண்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

உடல் எடை அதிகரிப்பு

தாயில்பட்டி கோட்டையூரை சேர்ந்த மகாதேவி:-

நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். அரசு வழங்கிய ஊட்டச்சத்து பொருட்களை பெற்றன். இந்த திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும். ஏழை பெண்கள் மிகவும் உதவும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வீடுதேடி வந்து ஊட்டச்சத்து பாருட்களை வழங்குகின்றனர்.

வத்திராயிருப்பு வீரகாளி:-

எனக்கு பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தது. குழந்தை உடல் எடை குறைவாகத்தான் பிறந்தது. ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்காக ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இந்த ஊட்டச்சத்து பெட்டகத்தில் உள்ள ஊட்டச்சத்து பொருட்களை தினமும் எடுத்துக் கொள்வதால் எனது குழந்தைக்கு ஊட்டச்சத்து அதிகரித்து தற்போது குழந்தை உடல் எடை அதிகரித்துள்ளது.

ஆரோக்கியமான குழந்தை

தாணிப்பாறையை சேர்ந்த வேல்தாய்:-

அரசு வழங்கிய ஊட்டச்சத்து பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த ஊட்டச்சத்தினை தினமும் நான் எடுத்துக் கொள்வதால் எனது குழந்தைக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அங்கன்வாடி பணியாளர்கள் தினமும் இது சம்பந்தமாக பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருவதுடன் தொடர்ச்சியாக எங்களது நலனை கண்காணித்து வருகின்றனர்.

இதனால் தற்போது எனது குழந்தையின் ஊட்டச்சத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு குழந்தையும் ஆரோக்கியமாகவும் உள்ளது. மகப்பேறு உதவித்தொகை எங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.

அரசுக்கு நன்றி

செந்நெல்குடி தங்கமாரி:-

நான் விருதுநகர் அருகே உள்ள செந்நெல்குடி கிராமத்தில் உள்ளேன். கர்ப்பிணியாக உள்ள நான் கிராம சுகாதாரச் செவிலியர் மூலம் பதிவு செய்த நிலையில் எனக்கு மாவட்ட நிர்வாகம் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கியுள்ளது. இந்த ஊட்டச்சத்து பெட்டகத்தில் உள்ள சத்துப் பொருட்கள் எனக்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது. எனவே என்னை போன்ற கிராமப்பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உரிய ஊட்டச்சத்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்காக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உடல் சோர்வு

சங்கரமூர்த்தி கிராமத்தை சேர்ந்த துரைச்சி கார்த்தி:- நான் 7 மாத கார்ப்பிணியாக உள்ளேன். அரசு வழங்கிய ஊட்டச்சத்து பொருட்களை பெற்றுள்ளேன். என்னை போன்ற கர்ப்பிணிகளுக்கும், பெண்களுக்கும் மிகவும் உதவும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக தற்போது வீடு தேடி வந்து வழங்குகின்றனர். இதனை வரவேற்கிறோம். இந்த ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய கலவை உடல் சோர்வை போக்குகிறது.

பாளையம்பட்டி கொத்தனார் காலனியை சேர்ந்த சத்யா:-

ஊட்டச்சத்து பொருட்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து, புரதச்சத்து, நார் சத்துக்களை அதிகரிக்கும் வகையில் இந்த தொகுப்பு அமைந்துள்ளது. இதுமிகவும் வரவேற்கத்தக்கது. அதேபோன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் உதவித்தாகையும் வழங்கப்படுகிறது. இது பெண்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

ஊட்டச்சத்து பெட்டகம்

டாக்டர் யசோதா மணி (துணை இயக்குனர், சுகாதாரத்துறை, விருதுநகர்):-

தமிழக அரசு கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்துக்காக ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க உத்தரவிட்டு அதன்படி விருதுநகர் மாவட்டத்திலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் இதில் அதிக ஆர்வம் கொண்டு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால் இதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை 10 ஆயிரத்து 628 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு 4-வது மாதத்திலேயே ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு விட்ட நிலையில் அடுத்து ஊட்டச்சத்து பெட்டகம் வந்தவுடன் மீண்டும் 7-வது மாதம் வழங்க திட்டமிட்டுள்ளோம்.கர்ப்பிணி பெண்கள் கிராம சுகாதார செவிலியர்களிடமும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பதிவு செய்து கொண்டால் அவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் கருவில் இருக்கும் குழந்தை அனைத்து சத்துக்களும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அரசுநடவடிக்கை எடுத்து வருகிறது. அதை விருதுநகர் மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் செயல்படுத்தி வருகிறோம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com