துணைவேந்தரை தேர்வு செய்யும் விவகாரம்: கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு கடிதம்

துணை வேந்தர்கள் நியமன விவகாரம் தொடர்பாக, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தரை தேர்வு செய்யும் விவகாரம்: கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு கடிதம்
Published on

சென்னை,

மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழ்நாடு கவர்னர் இருந்து வருகிறார். பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு மாநில அரசு சார்பில் நியமிக்கப்பட்டு, அந்த தேடுதல் குழு பரிந்துரைக்கும் 3 பேரில் தகுதியானவர்களைதான் கவர்னர் தேர்வு செய்கிறார்.

துணைவேந்தரை நியமனம் செய்வதற்கு அமைக்கப்படும் இந்த தேடுதல் குழுவில், வேந்தர் சார்பில் ஒருவரும், பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் ஒருவரும், கல்வி கவுன்சில் சார்பில் ஒருவரும் என மொத்தம் 3 பேர் இடம் பெறுவார்கள்.

கவர்னர் நிபந்தனை ஏற்க மறுப்பு

இதில் பல்கலைக்கழக மானிய குழுவின் (யு.ஜி.சி.) உறுப்பினர் இடம்பெற வேண்டும் என்று பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் இதனை மாநில அரசு ஏற்க மறுத்து வருகிறது. கவர்னரின் இந்த நிபந்தனையால் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

மாநில அரசு கடிதம்

இந்த நிலையில், இது தொடர்பாக மாநில அரசு, கவர்னருக்கு ஒரு கடிதத்தை எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்தக் கடிதத்தில், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளின்படி, மாநில பல்கலைக்கழக துணைவேந்தரை நியமனம் செய்வதற்கு, பல்கலைக்கழக மானிய குழு சார்பில் உறுப்பினரை இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளில் தெரிவித்துள்ளதை மட்டும் பின்பற்றினால் போதும் எனவும் குறிப்பிடப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

3 பல்கலைக்கழகத்துக்கு தேடுதல் குழு இல்லை

இந்த விதிமுறை மட்டுமல்லாது பல்கலைக்கழக துணைவேந்தரை நியமனம் செய்வது தொடர்பான இன்னும் பல அம்சங்களை சுட்டிக்காட்டியும் கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தரை நியமனம் செய்வது தொடர்பான தேடுதல் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், சென்னை பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு தேடுதல் குழு நியமிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com