வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம்; தாசில்தார் இடமாற்றம், 7 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்படும் ஒவ்வொரு மனுவும் மிக முக்கியமானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15-ந்தேதி தொடங்கி வைத்தார்.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மக்கள் வழங்கும் மனுக்கள் மீது அதிகபட்சம் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், இதுவரை நடந்த முகாம்கள் மூலம், லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள், திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தால் முறையாகக் கையாளப்படாமல், வைகை ஆற்றில் வீசப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். விசாரணையில், மனுக்களை கையாள்வதில் திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் அலட்சியமாகச் செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பவத்திற்குப் பொறுப்பான தாசில்தார் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், அலட்சியமாக இருந்ததாக கண்டறியப்பட்ட 7 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இது, அரசு ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து அரசுத் தரப்பு கூறுகையில், "மக்களின் குறைகளைக் களைவதே இந்த அரசின் முதன்மை நோக்கம். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்படும் ஒவ்வொரு மனுவும் மிக முக்கியமானது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மூலம், மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.






