

சென்னை,
விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக மே 5ஆம் நாளை வணிகர் நாளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணியும் வணிகர் சங்கங்களும் கொண்டாடி வருகிறோம். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு அதிகாரப் பூர்வமாக மே 5ஆம் நாளை வணிகர் நாளாக அறிவித்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மே 5ஆம் நாள் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக வணிகர் நாள் கொண்டாடப்படுகிறது.
வணிகப்பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வணிகர் நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே நடைபெறும் போரால் உலகளவில் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவையும் வெகுவாக பாதித்திருக்கிறது. குறிப்பாக, கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தமிழ்நாட்டில் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.
இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்து மக்களும் வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வணிக சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் பல உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட ஏராளமான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய அரசு கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை போக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஒரே நாடு ஒரே வரி என்ற பெயரில் மத்தியில் ஆளும் பாஜக அரசால் திணிக்கப்பட்ட ‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சிறு வணிகர்களை முற்றாக அழித்துக்கொண்டிருக்கிறது. ஒரே வரி எனக் கூறப்பட்டாலும் பல அடுக்கு வரிகள் போடப்படுகின்றன. அதுமட்டுமின்றி கூடுதல் வரிகளும் (செஸ்) விதிக்கப்படுகின்றன. உலகில் எந்த நாட்டிலும் இத்தகைய கடுமையான வரிவிதிப்பு முறை கிடையாது. இதனால் வணிகர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையைத் திரும்பப் பெறவேண்டுமென மத்தியில் ஆளும் பாஜக வலியுறுத்துகிறோம்
ஆன்லைன் வர்த்தகத்தில் இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அன்னிய நேரடி முதலீட்டு விதிகளுக்குப் புறம்பாக அவை ஏராளமான தள்ளுபடிகளை அவ்வப்போது அறிவிப்பதால் சில்லறை வணிகம் மிகப்பெரிய நட்டத்தை சந்தித்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசிடம் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை அதைத் தடுப்பதற்கு பாஜக அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சட்டத்துக்குப் புறம்பான ஆன்லைன் வர்த்தகத்தைத் தடுத்துநிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவரும் சிறு வணிகர்களுக்கு பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் கடன்களை எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் வழங்குகின்றன.. பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகளும் சிறு வணிகர்களுக்குக் கடன் வழங்க முன்னுரிமை அளித்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறோம்.
மே 10 ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணியின் சார்பில் வணிகர் மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. வணிகர்கள் விடுதலைச் சிறுத்தைகள் யாவரும் இம்மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
வணிகப் பெருங்குடிமக்கள் யாவருக்கும் மீண்டும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.