

சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தொழிலாளர்கள் தாங்கள் போராடிப் பெற்ற உரிமைகளை காக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் தேதியை மே தினமாக கடைபிடித்துக் கொண்டாடி வருகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசு நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வந்த தொழிலாளர் நலச் சட்டங்களை அகற்றிவிட்டு, அவர்களுக்கு விரோதமாக புதிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. பண மதிப்பிழப்பு, அதிகப்படியான சரக்கு மற்றும் சேவை வரி, பணவீக்கம், பொருளாதார தேக்கநிலையினால் பல சிறு குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டு, உற்பத்தி குறைந்து பலர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். தொழிலாளர்கள், பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் அடிப்படைக் காரணம் உழைப்பாளர்களின் அர்ப்பணிப்பு. எனவே, அவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். அவர்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும். சமத்துவமும், சமூகநீதியும் நிலைநாட்டும் நாளாக இந்த மே தினம் அமையட்டும். வறுமையை வெல்லும் ஆயுதமானது உழைப்பு. அதை மதிப்பதும், காப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். உழைப்பை போற்றி, உழைப்போரை உயர்த்தி சமத்துவத்தை நிலை நிறுத்துவோம்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எப்போதுமே உழைப்பாளர்களின் உரிமைகளுக்காக போராடும், குரல் கொடுக்கும் என்ற உறுதியுடன், உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.