அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார.
அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
Published on

சென்னை,

நாடு முழுவதும் நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை "கிருஷ்ண ஜெயந்தி" என்றும்; "கோகுலாஷ்டமி"" என்றும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும். எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். "நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்; எனக்குப் பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை; என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்" என்று கண்ணபிரான் பகவத் கீதையின் மூலம் வாழ்க்கையின் நெறிமுறையினை உலகுக்கு எடுத்துரைத்தார்.

ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றியும் தீமைகளை முறியடிக்கவும் உறுதியேற்க வேண்டும் அறம் பிறழ்கின்றபோது, நான் இவ்வுலகில் அவதரிப்பேன் என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப நம் கடன் அறத்தை வளர்ப்பதே என்ற உயரிய குறிக்கோளுடன் ஒன்றிணைந்து அனைவரும் வாழ வேண்டும். ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய திருநாளில், குழந்தைகளின் பிஞ்சு பாதச் சுவடுகளை மாவினால் நனைத்து இல்லங்களில் வழிநெடுகப் பதித்து, ஸ்ரீ கிருஷ்ண பகவானே தங்கள் இல்லத்திற்கு வந்ததாக பாவித்துப் போற்றி, அவருக்கு விருப்பமான வெண்ணெய், தயிர், பழங்கள் இளிப்பு பலகாரங்களைப் படைத்து, இறைவனை பக்தியுடன் வணங்கி வழிபடுவார்கள். இந்த இனிய நாளில், நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது உளமார்ந்த "கிருஷ்ண ஜெயந்தி"வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com