புத்தாண்டு உலக மக்கள் அனைவரும் மகிழ்வோடு வாழும் ஆண்டாக அமைந்திட வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி வாழ்த்து

கோப்புப்படம்
அனைத்து வன்முறைகளும் 2026-ல் முடிவுக்கு வருவதுடன், உலக சமாதானமும், அமைதியும் வலுப்பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
அனைவருக்கும் சர்வதேச புத்தாண்டு - 2026 வாழ்த்துகளை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. சர்வதேச புத்தாண்டு - 2026 பிறக்க இருக்கிறது. சர்வதேச புத்தாண்டு உலகம் முழுவதும் அனைத்து நாடுகளின், அனைத்து சமூகங்களையும், பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் கொண்டாடும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் மாறி வருகிறது. ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளையும், அன்பையும் பரிமாறிக் கொள்ளும் ஓர் சர்வதேச பண்பாட்டு விழாவாக அது மாறிவருவது மகிழ்ச்சியளிக்கிறது.
மதச்சார்பற்று பண்பாட்டு ரீதியாக உலக மக்களை பிணைக்கும் விழாவாக, பண்பாட்டு உலகமயமாக்கலுக்கு ஓர் எடுத்துக்காட்டாக, இந்த சர்வதேச புத்தாண்டு கொண்டாட்டங்கள் மாறிவருகின்றன. வரும் புத்தாண்டு 2026 உலக மக்கள் அனைவரும் மகிழ்வோடு வாழும் ஆண்டாக அமைந்திட வேண்டும்.
ரஷிய - உக்ரைன் போர், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் போன்றவை முடிவுக்கு வருவதுடன், அனைத்து நாடுகளிடையேயும், நட்புறவும், ஒத்துழைப்பும் வலுப்பெறும் ஆண்டாக அமைந்திட வேண்டும். அனைத்து வன்முறைகளும் 2026-ல் முடிவுக்கு வருவதுடன், உலக சமாதானமும், அமைதியும் வலுப்பெற வேண்டும்.
இந்தியாவில் பாசிச அபாயம் தடுக்கப்பட்டு, மக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழும் சூழல் உருவாக வேண்டும். அரசியல் அமைப்பு சட்டமும், நாட்டின் மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் காக்கப்பட வேண்டும். மாநில உரிமைகளும், இந்தியாவின் பன்முகத்தன்மையும் காக்கப்பட வேண்டும். உழைக்கும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட, மதவாத பாசிச சக்திகளை தனிமைப்படுத்திட, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைத்து பகுதி மக்களும், மதச்சார்பற்ற ஜனநாயக இடதுசாரி சக்திகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அனைவருக்கும், மனம் நிறைந்த சர்வதேச புத்தாண்டு -2026 வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






