

சென்னை,
சென்னை வளசரவாக்கம் மண்டலத்தில் ரூ.5.35 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பூங்கா, நகர்ப்புற நலவாழ்வு மையம் உள்ளிட்ட 4 கட்டிடங்களை மேயர் பிரியா இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வளசரவாக்கம் மண்டலத்தில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூபாய் 5.35 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்கா, நகர்ப்புற நல வாழ்வு மையம், வார்டு அலுவலகக் கட்டடம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் இரண்டாம் தளக் கட்டடம் உள்ளிட்டவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சி மேயர், பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-145க்குட்பட்ட நெற்குன்றம், மாதா கோவில் தெருவில் ரூபாய் 1.95 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவினை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்துப் பார்வையிட்டார். பின்னர், அப்பகுதியில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டடத்தினைத் திறந்து வைத்தார்.
இப்பூங்காவில் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், டென்னிஸ் கோர்ட், யோகா செய்யும் இடம், மினி அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 3,821 சதுர மீட்டர் பரப்பளவில் ரூபாய் 1.95 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சக்தி நகர் பிரதான சாலையில் ரூபாய் 2.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 153-வது வார்டு அலுவலகக் கட்டடத்தினைத் திறந்து வைத்தார். இந்த வார்டு அலுவலகம் கட்டடமானது 422 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
பின்னர், அப்பகுதியில் ரூபாய் 1.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தின் இரண்டாம் தளக் கட்டடத்தினைத் திறந்து வைத்தார். இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தின் இரண்டாம் தளக் கட்டடமானது 158 சதுர மீட்டர் பரப்பளவில் மின் தூக்கி மற்றும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், மண்டலக்குழுத் தலைவர். நொளம்பூர் வே. ராஜன், மாமன்ற உறுப்பினர்கள் சத்தியநாதன், சாந்தி இராமலிங்கம், ஸ்டாலின், பாரதி, மண்டல அலுவலர் (பொ) தட்சணாமூர்த்தி, செயற்பொறியாளர் சண்முகம் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.