எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை மாணவிகள் முதலிடம்

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சென்னை மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை மாணவிகள் முதலிடம்
Published on

கோவை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல மையங்கள், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அரசு இட ஒதுக்கீட்டில், பட்டதாரி மாணவ -மாணவிகள் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு, கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி.) நடைபெற உள்ளது.

இதையொட்டி டான்செட் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் நேற்று காலை வெளியிடப்பட்டது. இதை கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வரும், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கை செயலாளருமான பெ.தாமரை வெளியிட, அதை ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன் பெற்றுக்கொண்டார்.

சென்னை மாணவிகள் முதலிடம்

எம்.சி.ஏ. படிப்புக்கான தரவரிசையில் மாணவி எஸ்.நித்யா (டான்செட் மதிப்பெண்-70.333) முதலிடம், ஆர்.ஹரிஸ் (67.667) 2-வது இடம், ராகுல்பாபு (61.667) 3-வது இடம் பிடித்தனர். இவர்கள் 3 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.ஏ. படிப்புக்கான தரவரிசையில் சென்னை மாணவி ஆர்.கார்த்திகா (80.667) முதலிடம் பிடித்தார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மாணவி ஆர்.ரேஷ்மி (80.000) 2-வது இடம், ஈரோடு மாணவி ஏ.எஸ்.கார்த்திகா (78.333) 3-வது இடம் பிடித்தனர்.

இது தொடர்பாக பெ.தாமரை நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் www.gct.ac.in மற்றும் www.tnmbamca.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. எம்.சி.ஏ. படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 25-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 801 மாணவர்களும், 751 மாணவிகளும் என மொத்தம் 1,552 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

எம்.பி.ஏ. படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 29-ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 3,158 மாணவர்கள், 3,097 மாணவிகள் என 6,255 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அனைவருக்கும் இடம் கிடைக்கும்

கடந்த ஆண்டு புள்ளி விவரத்தின்படி, எம்.பி.ஏ. படிப்பில் 14 ஆயிரம் இடங்களும், எம்.சி.ஏ. படிப்பில் 12 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த ஆண்டு இந்த கலந்தாய்வுக்கு 7,807 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளதால் விண்ணப்பித்த அனைவருக்கும் விரும்பிய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதமும் மேற்கண்ட இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது.

கலந்தாய்வு தேதி, நேரம் குறித்த விவரங்கள் மாணவ- மாணவிகளின் செல்போனுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும். டான்செட் நுழைவுத்தேர்வு எழுதி, இந்த கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு இந்த ஆண்டு முதல் துணை கலந்தாய்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த துணை கலந்தாய்வு எம்.சி.ஏ. படிப்புக்கு 28-ந் தேதியும், எம்.பி.ஏ. படிப்புக்கு அடுத்த மாதம் 4-ந் தேதியும் நடைபெறுகிறது.

கட்டணம் எவ்வளவு?

இதில் பொது கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்துகொள்ள இயலாதவர்கள், கலந்தாய்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்காதவர்கள், இணையதளத்தில் பதிவு செய்தும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் ஆகியோர் தங்களுடைய அசல் சான்றிதழ்களுடன் மேற்கண்ட தேதிகளில் காலை 10 மணியளவில் நேரில் கலந்துகொள்ளலாம்.

கலந்தாய்வு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.5,300, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ரூ.1,150 செலுத்த வேண்டும். இதை ரொக்கமாகவோ அல்லது வரைவோலையாகவோ செலுத்தலாம். வரைவோலையாக செலுத்த விரும்புபவர்கள் தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கை -2018, அரசு தொழில்நுட்ப கல்லூரி (ஜி.சி.டி.), கோயம்புத்தூர்-13 என்ற முகவரிக்கு கோவையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com