நியூட்ரினோ எதிர்ப்பு பேரணியில் தீக்குளித்த ம.தி.மு.க. பிரமுகர் சாவு வைகோ நேரில் அஞ்சலி

மதுரையில் ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நியூட்ரினோ எதிர்ப்பு பேரணியில் தீக்குளித்த ம.தி.மு.க. பிரமுகர் சிகிச்சை பலனின்றி இறந்தார். #Vaiko
நியூட்ரினோ எதிர்ப்பு பேரணியில் தீக்குளித்த ம.தி.மு.க. பிரமுகர் சாவு வைகோ நேரில் அஞ்சலி
Published on

சிவகாசி,

மதுரையில் ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நியூட்ரினோ எதிர்ப்பு பேரணியில் தீக்குளித்த ம.தி.மு.க. பிரமுகர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மதுரை பழங்காநத்தத்தில் கடந்த 31-ந்தேதி ம.தி.மு.க. சார்பில் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயண தொடக்க விழா நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசிக்கொண்டு இருந்தபோது, கீழே நின்று கொண்டிருந்த விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி (வயது 50) என்பவர் பெட்ரோலை எடுத்து தன்மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.

உடனே அவரை மீட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அன்றைய தினமே வைகோ ஆஸ்பத்திரிக்கு சென்று ரவியை சந்தித்து ஆறுதல் கூறி விட்டு நடைபயணம் கிளம்பினார்.

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவி, நேற்று அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்தத்தகவல் உசிலம்பட்டியில் இருந்த வைகோவுக்கு தெரியவந்ததும், அங்கிருந்து அவர் உடனடியாக கிளம்பி மதுரை வந்தார்.

ரவியின் உடல், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்த வைகோ, உடலுக்கு கண்ணீர் சிந்தியப்படி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ரவியின் உடல் சொந்த ஊரான சிவகாசி நாடகசாலையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. ரவியின் உடலுக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு ரவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக நடந்த இரங்கல் கூட்டத்தில் வைகோ பேசும்போது, ரவியின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை. என்னுடைய போராட்டங்களை பற்றியும், என்னைப் பற்றியும் கொச்சைப்படுத்தி சிலர் கடந்த ஒரு வாரமாக வலைதளங்களில் மீம்ஸ் போடுகிறார்கள். அவர்களுக்கு சவுக்கடி கொடுக்கத்தான் ரவி தீக்குளித்தார். எனது போராட்டம் புனிதமானது என உலகுக்கு உணர்த்திவிட்டார் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com