பெட்ரோல் விலை கட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை : சுரேஷ் கோபி பேட்டி

விஜய் முதலில் வேலை செய்யட்டும்; மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்; நன்றாக செய்யட்டும் என சுரேஷ் கோபி கூறினார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி சுரேஷ் கோபி
Published on

கோவை,

கோவை விமான நிலையத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி சுரேஷ் கோபி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

வெளிநாடுகளின் சதி

சி.ஜே.பி விவகாரம் தொடர்பாக அவர் கூறுகையில், வெளிநாடுகளின் சதி இருந்தால் அது முறியடிக்கப்படும் என்றும், அதற்கான அனைத்து வசதிகளும் இந்தியாவிற்கு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், “சி.ஜே.பி போன்ற விவகாரங்களை பேச நான் ஆள் இல்லை; என்னை ஆராய்ச்சி பொருள் (research material) ஆக்காதீர்கள். இது இங்கிருந்து செயல்படுகிறதா என ஆய்வு செய்யுங்கள்,” என்றார்.

பெட்ரோல் விலை

பெட்ரோலிய துறை தொடர்பாக பேசும்போது, இன்று பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கடந்த சில மாதங்களாக விலை உயர்வை இழப்பீடு (compensate) செய்ய முயற்சி செய்யப்பட்டதாகவும், பெரும் விலை உயர்வைத் தவிர்க்கவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விளக்கினார். “விலை ஏற்றாமல் இலவசமாக வழங்கி கையிருப்பு இல்லாமல் போனால் என்ன ஆகும்? அனைத்தையும் சமநிலைப்படுத்தி தான் செயல்பட வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யா

சர்வதேச சூழ்நிலையை பற்றி பேசுகையில், போர் எப்போது முடியும் என்பது தெரியாது என்றும், “எல்லாரும் பிரார்த்தனை செய்வோம்... யாருக்காக இந்த போர்?” எனவும் அவர் கருத்து தெரிவித்தார். ரஷ்யாவை நம்பி உள்ளோமா என்ற கேள்விக்கு, சில விஷயங்கள் தங்களுக்கே தெரியாது என்றும் பதிலளித்தார்.

அமெரிக்காவில் அனுபவித்த வசதி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியைப் பற்றி கூறிய அவர், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் கட்டமைப்பு பல மடங்கு மேம்பட்டுள்ளதாகவும், 1990ஆம் ஆண்டு அமெரிக்காவில் அனுபவித்த வசதிகளை தற்போது இந்தியாவில் குறைந்த செலவில் பெற முடிகிறது என்றும் தெரிவித்தார். மேலும், இந்த ஆட்சி நிலையான வளர்ச்சி (sustainable development) நோக்கில் முன்னேறி வருவதாகவும் கூறினார்.

இலவச திட்டங்கள்

தமிழ்நாடு அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “பாஜக தமிழ்நாட்டில் வளரவில்லை என்பது இயற்கையான நடைமுறை; அது வளரட்டும்,” என்றார். இலவச திட்டங்கள் குறித்து, “இலவசம் கொடுத்து மக்களை கெடுத்துக் கொள்ள கூடாது,” என்றும் கருத்து தெரிவித்தார்.

நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து, “விஜய் முதலில் வேலை செய்யட்டும்; மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்; நன்றாக செய்யட்டும். கேரளாவில் வந்தால் அங்கும் வரட்டும்,” என்றார்.

நடிகர் ரஜினிகாந்த்

அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசுகையில், “ரஜினி அவரது முடிவை அவரே எடுப்பார். அவரது இதயத்தை நான் நோண்டி தொந்தரவு செய்ய முடியாது. அவர் வந்தால் வரட்டும்; தமிழ் மக்களுக்கும் உலகத்திற்கும் பயன்படட்டும். அவர் வந்தால் இவருக்கு என்ன ஆகும், அவருக்கு என்ன ஆகும் என்று பேச தேவையில்லை,” என தெரிவித்தார்.

மேலும், மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், கேரளாவின் புதிய அரசு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com