

சென்னை,
சென்னை எழிலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்பதற்காக மாநில பேரிடர் மீட்பு குழுவினர், உள்ளூர்வாசிகள், போலீஸ், வனத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதவிர 6 சுகாதாரக்குழுவும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக கலெக்டர் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக இரவு-பகலாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டனர்.
6 பேர் கவலைக்கிடம்
மீட்கப்பட்ட 17 பேரில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இருந்தாலும் உரிய முதல் உதவி சிகிச்சை அளித்து, அவர்களை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
டிரெக்கிங் சென்றவர்கள் முறையான அனுமதி வாங்கி சென்றார்களா? இல்லையா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்துவார்கள்.
ஒழுங்குப்படுத்த நடவடிக்கை
டிரெக்கிங் கிளப்புகளை ஒழுங்குப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
காற்று வேகமாக வீசியதால், காட்டுத் தீ வேகமாக பரவியதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. காட்டுத்தீயை செயற்கைக்கோள் புகைப்படத்தை வைத்து, வனத்துறை கண்காணித்து வருகிறது.
உடனடியாக அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையையும் எடுத்து வருகிறது. காற்றை பொருத்து தீ சில நேரங்களில் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. அதுதான் இந்த சம்பவத்தில் நடந்திருக்கிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று கடந்த 3 நாட்களாக நாங்கள் அறிவுறுத்தி வருகிறோம். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் சிலர் ஏற்கனவே சென்றுவிட்டனர். அவர்களில் சுமார் 500 பேர் திரும்பி வந்துவிட்டனர். இன்னும் 200 மீன்பிடி படகுகளில் சென்றவர்களை கரை திரும்புவதற்கான தகவல்களை தெரிவிக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.