வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒரு சொட்டு மழைநீரும் வீணாகாமல் சேமிக்க நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒரு சொட்டு மழைநீரும் வீணாகாமல் சேமிக்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒரு சொட்டு மழைநீரும் வீணாகாமல் சேமிக்க நடவடிக்கை
Published on

சென்னை,

அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊரகப் பகுதிகளில் பாரம்பரியமாக உள்ள நீர்நிலைகள், மழைநீர் சேகரிக்கவும், வெள்ளத்தை தவிர்க்கவும் கட்டப்பட்டவை ஆகும். பல்வேறு பயன்பாடுகளுக்கு அந்த நீர் பயன்படுத்தப்படுகிறது.

நிலத்தடி நீரை உயர்த்தும் பணி மட்டுமல்லாமல், மழைநீர் சேகரிப்பு என்பது நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தும் அம்சமாக உள்ளது. எதிர்கால நீர் பயன்பாட்டுக்கு இது பெரிதும் உதவும்.

பண்ணைக் குட்டைகள்

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் மிக முக்கிய திட்டமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அமைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்து 121 பண்ணைக் குட்டைகள் இந்தத் திட்டத்தின் மூலம் 30 நாட்களில் அமைக்கப்பட்டது உலக சாதனை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இந்த தனித்துவம் பெற்ற முயற்சி பாராட்டுக்குரியது. இதுபோன்ற பணிகள்தான் எதிர்காலத்தில் மிகப் பெரிய பயனளிக்கக்கூடியதாக இருக்கும்.

பண்ணைக் குட்டைகளே பருவகாலம் மற்றும் மழைப்பொழிவு குறைவுபடும்போது அவற்றை எதிர்கொள்ள உபயோகமாக இருக்கும். அதிக மழைப் பொழிவை அவை சேகரித்து வைத்துக் கொள்கின்றன. வறட்சியான காலகட்டத்தில் அவை மிகுந்த பயனளிக்கின்றன.

ஒரு சொட்டும் முக்கியம்

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மூலம் பல்வேறு வகையான குட்டைகளை அமைக்க முடியும். அவற்றின் மூலம் அதிக அளவில் மழைநீரை சேகரித்து வைக்க முடியும். இதனால் வேலைவாய்ப்புடன், நீர்வளமும் பெருகுகிறது.

தற்போது, மழை எங்கு பெய்தாலும், எப்போது பெய்தாலும் அதை சேகரி என்ற சிறப்பு பிரசாரம் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதை சிறப்பாக உடனடியாக அமல்படுத்தி, வடகிழக்கு பருவமழைக்கு முன்பு முடிக்க வேண்டும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ காலத்தில் விழும் ஒரு சொட்டு மழைநீரும் சேகரிக்கப்பட வேண்டும் என்பதற்கு நீங்கள் முக்கியத்துவம் அளித்து, அதற்கேற்ற சேமிப்பு நிலைகளை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com