

சேலம்
சேலம் - சென்னை இடையேயான எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்று சேலம் விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் - சென்னை இடையே நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 8 வழி சாலை அமைக்கப்பட இருக்கிறது. அதிகரிக்கும் வாகனங்களால் ஏற்படும் விபத்தை தவிர்ப்பதுடன் மக்களின் உயிரை காக்கவே 8 வழிச்சாலை திட்டம் கொண்டுவரப்படுகிறது. எரிபொருள் சேமிக்கப்படும்.
அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடியதாக சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டம் இருக்கும். 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகும்.
நில உரிமையாளர்களுக்கு தேவையான இழப்பீடு பெற்றுத் தரப்படும்; நிலத்தை திட்டத்திற்கு வழங்க மாநில அரசு உதவி செய்கிறது. வீடுகளை இழக்கும் மக்களுக்கு அரசே நிலம் ஒதுக்கி பசுமை வீடுகளை கட்டித்தரும்.
வாகனங்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக பெருகியிருக்கிறது. அரசுக்கு நல்ல பெயர் கிடைக்ககூடாது என்பதற்காகவே மக்களிடம் வெறுப்புணர்ச்சி தூண்டப்படுகிறது.
எட்டு வழிச்சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்கள், சாலைவிபத்தில் 2 கைகளை இழந்தவருக்கு இறந்தவரின் கைகளை பொறுத்தி சாதனை படைத்த அரசு மருத்துவர்களை பாராட்டியது உண்டா?
அரசு மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவே 8 வழிசாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. யாருடைய தனிப்பட்ட லாபத்திற்காக சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தவில்லை.
மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்காகவும்தான் எட்டு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவே 8 வழிச்சாலை, ஆனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .இந்தியாவிலேயே இரண்டாவது எட்டு வழிச்சாலையாக சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
எட்டு வழிச்சாலையால் தொழில் வளர்ச்சி பெருகும். வேலை வாய்ப்பை உருவாக்க உள்கட்டமைப்பு அவசியம், உள்கட்டமைப்பு சரியாக இருந்தால்தான் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க முடியும். எனவே ஊடகங்களும் மீடியாக்களும் எட்டு வழி சாலை அமைய முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.