

சென்னை,
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.50% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், அவர்களுக்கான சமூகநீதி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அரசு பள்ளிகள் இல்லாத பகுதிகளில் வேறு வழியின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அடித்தட்டு ஏழை மாணவர்களுக்கு அதே சமூகநீதி மறுக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களின் சமூக, பொருளாதாரச் சூழல்கள் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும் சூழலில், அரசு பள்ளி மாணவர்களை பாதிக்காத வகையில், உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் சமூகநீதி வழங்க வேண்டிய தருணம் வந்துள்ளது.
நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு 2020&21-ம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன் பயனாக, 2020-ம் ஆண்டுவரை சராசரியாக 6 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைத்து வந்த நிலையில், நடப்பாண்டில் 7.5% இட ஒதுக்கீட்டில் மட்டும் 537 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இதன் வாயிலாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் சமூகநீதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதே சமூகநீதி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஐந்தாண்டுகளாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. 7.5 இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு ஐந்தாண்டுகளுக்கு மேலாகி விட்டதையடுத்து, ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய ஆணையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இந்த சமூகநீதியை நீட்டிப்பது குறித்து அரசு ஆராய வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 1.20 கோடி மாணவர்கள் பள்ளிகளில் பயின்று வரும் நிலையில், அவர்களில் 50% மாணவர்கள் தனியார் பள்ளிகளில் பயில்கின்றனர். மீதமுள்ள 35% மாணவர்கள் அரசு பள்ளிகளிலும், 15% மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பயின்று வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடையிலான சமூக, பொருளாதார நிலையில் எந்த வேறுபாடும் இல்லை. உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையினர் அந்தப் பள்ளிகளை தேடிச் சென்று சேர்வதில்லை. தங்கள் பகுதியில் அரசு பள்ளிகள் இல்லாததால்தான் இலவசக் கல்வி பெறுவதற்காக அவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேருகின்றனர். உதவு பெறும் பள்ளிகளை தனியார் அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் நடத்தினாலும் கூட, அப்பள்ளிகளின் ஆசிரியர்கள் ஊதியம், நிர்வாகச் செலவு ஆகியவற்றை அரசேதான் ஏற்றுக்கொள்கிறது. இரு பள்ளிகளின் கல்வித்தரமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கிறது.
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பங்கு 20%க்கும் கூடுதலாக உள்ளது. அவற்றில் 5 மாவட்டங்களில் அரசு பள்ளிகளை விட அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிக மாணவர்கள் பயில்கின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகள் ஒரு காலத்தில் அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்ட பகுதிகளில், அரசு பள்ளிகள் தொடங்கப்படாததால், அப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் உதவி பெறும் பள்ளிகளில்தான் சேர வேண்டியுள்ளது. இதில் அவர்களின் தவறு எதுவும் இல்லை. இதற்காக அவர்களுக்கு மருத்துவக் கல்வியில் சேருவதற்கான சமூகநீதியை மறுப்பது நியாயமல்ல.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால், அதற்காக தனிப் பயிற்சி பெற வேண்டும்; அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அதற்கான வசதி இல்லை என்பதுதான் அவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு காரணம் ஆகும். இதே வரையறை அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கும் பொருந்தும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி பொன். கலையரசன் தலைமையிலான குழு அரசுக்கு அளித்த அறிக்கையில், அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் குடும்ப சராசரி வருமானம், 2018&19-ம் ஆண்டில் ரூ.48,686 ஆக இருப்பதாக தெரிவித்திருந்தது. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் சராசரி குடும்ப வருமானம் ரூ.67,102 ஆகவும், இது மெட்ரிக் பள்ளிகளில் ரூ.1,50,526 ஆகவும், சிபிஎஸ்இ பள்ளிகளில் 4,69,413 ஆகவும் இருப்பதாகவும் நீதிபதி பொன். கலையரசன் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களின் குடும்ப வருமானங்களில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், அவர்களின் வருமானத்தை விட தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் குடும்ப வருமானம் 309% முதல் 700% வரை அதிகமாக உள்ளது. இத்தகைய நிலையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை அரசு பள்ளி மாணவர்களுடன் போட்டியிட அனுமதிப்பதற்கு பதிலாக அவர்களை விட 7 மடங்கு அதிக வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் போட்டியிட கட்டாயப்படுத்துவது சமூக அநீதி ஆகும். இந்த அநீதி தொடர தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.
தனியார் தொழிற்சாலை ஒன்றில் இரவுக் காவலராக பணியாற்றி வரும் ஏழை ஒருவரின் மகளான வர்ஷா என்பவர், அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்றவர் என்பதற்காக அவருக்கு 7.5% இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார், "அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் பொருளாதார, சமூக நிலை என்பது அரசு பள்ளி மாணவர்களை போன்றுதான் உள்ளது. அதனால், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து அரசு மறு ஆய்வு செய்யலாம்" என்று ஆலோசனை வழங்கினார். அதனால், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சமூகநீதி வழங்க நீதிமன்றங்கள் தடையாக இருக்காது.
மேற்கண்ட அனைத்துக் காரணங்களையும் கருத்தில் கொண்டு, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கும் சமூகநீதி வழங்க அரசு முன்வர வேண்டும். இதனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 7.5% இட ஒதுக்கீடு அப்படியே தொடருவதையும், புதிதாக 2.50% இட ஒதுக்கீட்டை உருவாக்கி அதை அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு வழங்கவும் உரிய நடைமுறைகளை பின்பற்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.