ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு மருத்துவ முகாம் - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாமை நடத்த அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் அளித்து வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 25 பேர் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல, ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாமை நடத்த அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளவர்களுக்கு இன்று (13-ந் தேதி) முதல் வரும் 18-ந் தேதி வரை மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட சுகாதார அலுவலர்கள் அலுவலகத்தில் உடல் தகுதி சான்றிதழ் பெறுவதற்கான மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்டங்களில் உள்ள ஹஜ் கமிட்டியுடன் இணைந்து, மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து இந்த பணியை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்களில் 61 மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. அதன்படி, சென்னையில் நாளை முதல் வருகிற 20-ந் தேதி வரை சூளை பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு போலியோ தடுப்பு மருந்து, மூளை காய்ச்சலை தடுக்கக்கூடிய தடுப்பூசி போன்றவற்றை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட ஹஜ் பயணிகளுக்கு இந்த காலத்தில் பொதுவாக வரக்கூடிய நோய்களுக்கான தடுப்பு ஊசிகளையும் செலுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com