மருத்துவக்கல்வி அகில இந்திய தொகுப்பு இடங்கள்: நடப்பாண்டிலேயே இடஒதுக்கீட்டை செயல்படுத்த முன்வர வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

மருத்துவக்கல்வியில் அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான இடஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே செயல்படுத்த முன்வர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவக்கல்வி அகில இந்திய தொகுப்பு இடங்கள்: நடப்பாண்டிலேயே இடஒதுக்கீட்டை செயல்படுத்த முன்வர வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மருத்துவக்கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பாண்டில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடும், இதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். மருத்துவக்கல்வியில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் இடஒதுக்கீடு வழங்க ஐகோர்ட்டு கொள்கை அளவில் அனுமதி அளித்துவிட்ட நிலையில், அதை செயல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. மருத்துவக்கல்விக்கான மாணவர் சேர்க்கை இன்னும் நிறைவடையாத நிலையில், நடப்பாண்டில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த எந்த தடையும் இல்லை.

பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும், தமிழ்நாட்டில் அகில இந்திய தொகுப்பு இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மத்திய அரசு முன்வந்தால் அகிலஇந்திய தொகுப்பில் நடப்பாண்டிலேயே இடஒதுக்கீட்டை செயல்படுத்த சுப்ரீம் கோர்ட்டும் அனுமதிக்கும்.

எனவே, மருத்துவக்கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில், தமிழ்நாட்டில் மட்டும் நடப்பாண்டிலேயே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com