டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்ற மருந்துக்கடைக்கு 'சீல்'

டாக்டரின் பரிந்துரைசீட்டு இல்லாமல் மாத்திரையை விற்பனை செய்த மருந்துக்கடைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்ற மருந்துக்கடைக்கு 'சீல்'
Published on

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். டாக்டரின் பரிந்துரைசீட்டு இல்லாமல் மாத்திரையை விற்பனை செய்த மருந்துக்கடைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கர்ப்பமான சிறுமி சாவு

திருப்பூரை அடுத்த நல்லூர் முத்தணம்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தாள். இந்த நிலையில் அந்த சிறுமியின் உடலில் மாற்றங்கள் தென்பட்டன. மேலும் அந்த சிறுமியின் வயிறு நாளுக்குநாள் பெரிதாகி வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அந்த சிறுமியை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசாதனை செய்த டாக்டர்கள், அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியின் எதிர்காலம் கருதி இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்க சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க முடிவு செய்தனர். இதற்காக கோவில்வழி முத்தணம்பாளையம் ரோட்டில் உள்ள 'நியூ கவிதா' மருந்துக்கடையில் கருக்கலைப்பு மாத்திரையை வாங்கி வந்து சிறுமிக்கு கொடுத்துள்ளனர். அந்த மாத்திரையை சாப்பிட்ட சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் பயந்துபோன பெற்றோர் சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கடும் வயிற்று வலியால் துடித்த சிறுமி கடந்த 27-ந்தேதி பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் மருத்துவமனைக்கு வந்து சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் தேசிய மருத்துவ திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, மாநகர நகர் நல அலுவலர் கவுரி சரவணன், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) கவுரி, மருத்துவ துறை இணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் ஹரிகோபால கிருஷ்ணன், மாவட்ட மருந்துகள் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட மருந்துக்கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அங்கு விற்கப்படும் மருந்துகள், இருப்பில் வைக்கப்பட்டுள்ள மருந்துகள் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது அந்த மருந்துக் கடையில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரை வழங்கியதும், காலாவதியான மாத்திரைகள் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

மேலும் உணவு பாதுகாப்பு துறையிடம் சான்று பெறாமல் சத்துமாவு உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர். டாக்டர்கள் மட்டுமே கொடுக்கும் சில மாத்திரைகளை மருந்துக்கடையில் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மருந்துக்கடையை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.

தீவிர விசாரணை

மேலும் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் நல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமானவர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட மருந்துக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com