எம்.பி.பி.எஸ். படிப்பை நிறைவு செய்ய மீண்டும் 10 ஆண்டுகள் அவகாசம்..!

மாணவர்களுக்கு தங்களுடைய எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பு சார்ந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
எம்.பி.பி.எஸ். படிப்பை நிறைவு செய்ய மீண்டும் 10 ஆண்டுகள் அவகாசம்..!
Published on

சென்னை,

எம்.பி.பி.எஸ்.

தேசிய மருத்துவ ஆணையம் இளநிலை மருத்துவக்கல்வி (திருத்த) விதிமுறைகள் 2026 தொடர்பான அதிகாரப்பூர்வ வரைவு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் மாணவர்கள் தங்களுடைய எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பு சார்ந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வரைவு அறிவிப்பில் எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பை முடிப்பதற்கான கால அவகாசத்தை 10 ஆண்டுகளாக உயர்த்தி இருக்கிறது.

ஏற்கனவே இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) விதிகளின்படி, ஒரு மாணவர் எம்.பி.பி.எஸ். படிப்பை முடிக்க 10 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் 2023-ல் தேசிய மருத்துவ ஆணையம் இளநிலை மருத்துவக் கல்வி விதிமுறைகள், 2023-ஐ வெளியிட்டது. அந்த விதிமுறைகளின்படி, மாணவர்கள் தங்களுடைய எம்.பி.பி.எஸ். படிப்பை தாங்கள் அதில் சேர்ந்த தேதியில் இருந்து 9 ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக முடிக்க வேண்டும் என்ற கால வரம்பை குறைத்தது.

இது எம்.பி.பி.எஸ். படிப்பை முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடும் அழுத்தத்தை தந்ததாக கூறப்பட்டது.

10 ஆண்டுகள்

மேலும் வெளிநாட்டில் மருத்துவப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வெளிநாடு மருத்துவ பட்டதாரி உரிம விதிமுறைகள் 2021-ன்படி (எப்.எம்.ஜி.எல்.) 10 ஆண்டுகள் அவகாசம் இருக்கும்போது, இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் ஏன் 9 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்ற கேள்வியும் அப்போது எழுந்திருந்தது.

இந்த சூழலில் தற்போது இளநிலை மருத்துவக்கல்வி விதிமுறைகள் 2023-ல் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்து, மாணவர்கள் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை (கட்டாய சுழற்சி மருத்துவ பயிற்சி உள்பட) முடிப்பதற்கான கால அவகாசத்தை 10 ஆண்டுகளாக உயர்த்த தேசிய மருத்துவ ஆணையம் இளநிலை மருத்துவக் கல்வி (திருத்த) விதிமுறைகள், 2026 தொடர்பான வரைவு அறிக்கையில் பரிந்துரைத்து இருக்கிறது.

இது உடல்நலக்குறைவு, குடும்பச்சூழல் அல்லது கல்வி ரீதியான பின்னடைவுகளால் பாதிக்கப்படும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் இந்த கூடுதல் ஓராண்டு அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

மின்னஞ்சல் முகவரி

கால அவகாசம் 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டாலும், முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். தேர்வை எழுதி தேர்ச்சி பெற அதிகபட்சமாக 4 வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படும் என்ற விதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவ்வாறு முடிக்காதவர்கள் படிப்பை தொடரமுடியாது.

இந்த வரைவு அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காகவும், மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள் போன்ற இதர பங்குதாரர்களின் கருத்துப்பதிவிற்காகவும் www.nmc.org.in என்ற இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

இதன் மீது வருகிற 17-ந்தேதி வரை comments.ugregulations@nmc.org.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக கருத்துகள் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com