

சென்னை,
2020-21-ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த 18-ந் தேதி தொடங்கியது. அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் முதல் 3 நாட்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் ஒதுக்கப்பட்டு இருந்த 405 இடங்களில் 399 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
அடுத்ததாக 21-ந் தேதி விளையாட்டுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு மற்றும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பிரிவு ஆகிய சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 151 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மட்டும் 91 இடங்கள் நிரம்பாமல் காலியாகின.
அதன் தொடர்ச்சியாக பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை முதற்கட்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு நடந்தது. அதன்படி, முதல் நாள் கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில், நிவர் புயல் காரணமாக மற்ற கலந்தாய்வு தேதிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் மருத்துவ படிப்பு பொது கலந்தாய்வு மீண்டும் தொடங்கி நடைபெற இருக்கிறது. அதற்கான அட்டவணையை மருத்துவ கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.
அதில் வருகிற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி வரை கலந்தாய்வு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக் கான அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் கூறியிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் 390 பேர் முதல் 560 பேர் வரையிலான எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.