

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானைக்கு நேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. யானைக்கு பக்தர்கள் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை கடந்த 2024-ம் ஆண்டு பாகன் உள்பட 2 பேரை தாக்கி கொன்றது.எனவே. பாதுகாப்பு கருதி அன்று முதல் யானையின் உடல் நலன் குறித்து தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. யானை சரியாக உணவு உட்கொள்கிறதா? அதன் குணநலன்களில் மாற்றம் உள்ளதா? என வன கால்நடை மருத்துவ குழுவினர் 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் கால்நடைத்துறை மருத்துவக்குழுவினர் தெய்வானை யானைக்கு நேற்று வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இந்த பரிசோதனை குறித்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறியதாவது:-
வனத்துறை சார்பில் மாவட்ட வளர்ப்பு யானைகள் நலக்குழு மூலம் 3 மாதத்திற்கு ஒருமுறை யானையின் உடல் ஆரோக்கியம் குறித்து ஆய்வு செய்கிறோம். அதேபோல் திருச்செந்தூர் கோவில் தெய்வானை யானையின் உடல் நலம் குறித்து ஆய்வு செய்தோம். யானை நலமுடன் உள்ளது என கூறினார்.
யானைக்கு கோவில் சார்பில் ஆரோக்கியமான உணவு. பழங்கள் வழங்கப்படுகிறது. அதனால் பக்தர்கள் யானைக்கு நேரடியாக பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்க வேண்டாம். அவ்வாறு வழங்குவது யானையின் உடல் நலனுக்கு உகந்தது அல்ல. பக்தர்கள் யானைக்கு ஏதாவது செய்ய நினைத்தால், யானை பராமரிப்பு நிதியாக கோவில் நிர்வாகத்திடம் வழங்கிடலாம். சரவணப்பொய்கையில் யானை ஓய்வு எடுப்பதற்கு கூடுதலாக குடில் ஒன்று அமைக்கப்பட உள்ளது.