கடலூர் அருகே விளைநிலங்களில்மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

கடலூர் அருகே விளைநிலங்களில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் அருகே விளைநிலங்களில்மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
Published on

மருத்துவ கழிவுகள்

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருத்துவக் கழிவுகளை முறைப்படி எவ்வாறு அகற்ற வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. அதன்படி மருத்துவமனைகளில் பயன்படுத்திய பேண்டேஜ், துணிகள், கையுறைகள், மருந்து பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை குறிப்பிட்ட நாட்களில் மருத்துவ கழிவு மேலாண்மை மையத்தினர் எடுத்துச் சென்று அழித்து வருவது வழக்கம்.

ஆனால் கடலூரில் மருத்துவ கழிவுகள் சாலையோரம் கொட்டப்பட்டு வருகிறது. ஆம், கடலூரில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையின் இருபுறமும் முந்திரி மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இந்த சாலை வழியாக தான் அரிசிபெரியாங்குப்பம், எம்.புதூர், ராமாபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள சாலையோரமும், விளைநிலங்களுக்குள்ளும் கடந்த சில நாட்களாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் ஏராளமான சாக்கு மூட்டைகளில் மருத்துவ கழிவுகள் சிதறி கிடக்கின்றன.

ரத்தம் உறைந்த கையுறைகள்

இரவு நேரத்தில் மருத்துவ கழிவுகளை வாகனங்களில் ஏற்றி வந்து மூட்டை மூட்டைகளாக கொட்டி வருகின்றனர். அவற்றில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ரத்தம் உறைந்த கையுறைகள், மருந்து பாட்டில்கள், சிரிஞ்சுகள், ரத்தம் உறைந்த பஞ்சுகள் உள்ளிட்டவை உள்ளன.

அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மருத்துவ கழிவுகளால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையோரங்களிலும், விளைநிலங்களிலும் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துறை ரீதியாக நடவடிக்கை

இதற்கிடையே அரிசிபெரியாங்குப்பம், எம்.புதூர் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாங்கள் வசிக்கும் பகுதியில் மர்மநபர்கள் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தக்கூடிய மருத்துவ கழிவுகளை மூட்டை மூட்டைகளாக இரவு நேரங்களில் விவசாய நிலங்களிலும், வாய்க்கால்களிலும் கொட்டி செல்கின்றனர். எனவே சுற்று வட்டார பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் உடனடியாக அந்த மருத்துவ கழிவுகளை அகற்ற வேண்டும். மேலும் அதனை கொட்டியவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com