

நெல்லை,
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகளால் சுகாதாரக்கேடாக உள்ளது. இதனால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் பல்லாயிரக்கணக்கான வெளி நோயாளிகளும், உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகிறார்கள். மேலும் நோயாளிகளை பார்ப்பதற்கு ஏராளமான உறவினர்களும், பொதுமக்களும் வந்து செல்கிறார்கள்.
இதனால் இந்த ஆஸ்பத்திரி எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும். இந்த ஆஸ்பத்திரியில் சேகரிக்கப்படும் குப்பைகளை வளாகத்தில் குவித்து வைக்கின்றனர். பின்னர் அதனை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் தினமும் அகற்றுகின்றனர். இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருத்துவ கையுறைகள், நோயாளிகள் பயன்படுத்திய சிறுநீர் சேகரிப்பு பைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள், உணவு கழிவுகளும் கடந்த சில தினங்களாக ஆஸ்பத்திரி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த குப்பைகளை அகற்றாததால் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதனால் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. நோயாளிகள், உறவினர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். தொற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய அந்த மருத்துவக் கழிவுகளைப் பாதுகாப் பாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் செல்வராஜ் கூறுகையில், “இந்த மருத்துவக் கழிவுகளை உடனே அகற்ற வேண்டும் என்று மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களது வாகனம் பழுதடைந்ததால் அகற்ற முடியவில்லை என்று சுகாதார ஆய்வாளர்கள் கூறினார்கள். இருந்தாலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் உடனே அகற்ற வேண்டும் என்று தகவல் தெரிவித்துள்ளோம். உடனே அகற்றுவதாக தெரிவித்துள்ளனர்” என்றார்.