

சென்னை,
மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை வழங்கக்கூடாது. சென்னையில் நடைபெற்ற மருந்தாளுநர்கள் தினத்தில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 25 ஆம் நாள் உலக மருந்தாளுநர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்று (14.10.2026) சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மருந்தாளுநர்கள் தினத்தில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட மருந்தாளுநர்கள் அனைவரும் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் போதை பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 25 அன்று உலகம் தன் மருந்தாளுநர்களுக்கு நன்றி செலுத்துகிறது. 1912-ஆம் ஆண்டு அதே நாளில் தோன்றியதால், சர்வதேச மருந்தியல் கூட்டமைப்பு அந்தநாளை தேர்ந்தெடுத்தது. அந்தக்கொண்டாட்டத்தை இன்று தமிழ்நாடு மருந்தியல் கவுன்சில் நம்மண்ணுக்கு கொண்டு வந்திருக்கிறது. நம் மாநிலத்தின் மருந்துகளை பாதுகாப்பாக வைத்திருப்பவர்களிடையே நிற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக மருந்தாளுநர்களுக்கு அதிகாரமளித்தல்
இந்த ஆண்டின் கருப்பொருள்: “ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக மருந்தாளுநர்களுக்கு அதிகாரமளித்தல்.” இது மருந்தாளுநர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல. கல்வி, ஆதரவான கொள்கைகள், சுகாதார அமைப்பில் முழுமையான இடம் இவற்றின் மூலம் மருந்தாளுநர்களை வலுப்படுத்துங்கள் என்று அரசுகளுக்கும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும் அந்தக் கூட்டமைப்பு விடுத்துள்ள அழைப்பு இது. அந்த அழைப்புக்குத் தமிழ்நாடு அரசு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைச் சொல்லவே நான் இங்கு வந்திருக்கிறேன்.
நான் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயின்றவன். இளம் மருத்துவர் கற்கும் முதல் பாடங்களில் ஒன்று, நம்மை பணிவு கொள்ள செய்யும் பாடம்: மருந்துச் சீட்டு என்பது ஒரு நோக்கம் மட்டுமே. சரியான மருந்து, சரியானதரத்தில், சரியான அறிவுரையுடன், சரியான நோயாளியைச் சென்றடையும் போது தான் அது சிகிச்சையாகிறது. மருத்துவரின் பேனாவுக்கும் நோயாளியின் குணமடைதலுக்கும் இடையில் நிற்பவர் மருந்தாளுநர்.
இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் உணர்ந்திருந்தார். ‘மருந்து’ அதிகாரத்தில் அவர் கூறுகிறார்:
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து
நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தோடு அருகிருந்து அதை முறையாகச் சேர்ப்பவர் — இந்த நான்கும் சேர்ந்ததே மருத்துவம். அந்த நான்காமவருக்கும் வள்ளுவர் சம இடம் தந்தார். இன்று அந்த இடம் உங்களுக்கு உரியது.
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 50,000 மருந்தகங்கள் உள்ளன. பெரும்பாலான தெருக்களில், மருத்துவமனைக்கு முன்பே மருந்தகம் திறக்கிறது; அதற்கு பின்னரே மூடுகிறது. இரவு பத்து மணிக்கு காய்ச்சல் கண்ட குழந்தையோடு நிற்கும் தாய்க்கும், இரத்த அழுத்தமாத்திரை தீர்ந்து போன முதியவருக்கும் அருகில் கிடைக்கும் முதல் சுகாதார நிபுணர் பெரும்பாலும் மருந்தாளுநர் தான் — சில நேரங்களில் அவர் மட்டுமே. பெருந்தொற்றின் கடினமான நாட்களில் வாழ்க்கையே முடங்கிய போதும், மருந்தகங்களின் கதவுகள் திறந்தே இருந்தன. அதைத் தமிழ்நாடு மறக்கவில்லை.
எங்கள் அரசை பொறுத்தவரை, மருந்தாளுநர்களுக்கு அதிகாரமளித்தல் என்பது மூன்று சொற்களில் அடங்கும்: கல்வி, களம், கண்ணியம். வாசலை திறக்கும் கல்வி; நீங்கள் பெற்ற பயிற்சிக்கு ஏற்ற பணிக்களம்; உங்கள் தொழிலுக்கு உரிய கண்ணியம்.
கல்வி. இன்று அரசு மருத்துவக்கல்லூரியில் மருந்தியல் பயில விரும்பும் மாணவருக்கு இரண்டே வாய்ப்புகள்: சென்னையும் மதுரையும். நம் மருந்தியல் மாணவர்களில் பெரும்பாலோர் சுய நிதி கல்லூரிகளில் பயில்கின்றனர்; அங்குள்ள கட்டணம் விவசாய குடும்பத்துக்கும் உழைக்கும் குடும்பத்துக்கும் பெரும் சுமை. திறமை தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிறது; வாய்ப்பு அப்படி பரவவில்லை. அதனால்தான், பத்து அரசுக்கல்லூரிகளில் பி.பார்ம். படிப்பை எங்கள் அரசு அறிமுகப்படுத்துகிறது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக, ஆறு ஆண்டு மருத்துவ மருந்தியல் பட்டப்படிப்பான பார்ம்.டி., அரசு மருத்துவக்கல்லூரிகளில் கற்பிக்கப்பட உள்ளது. பார்ம்.டி. ஏன் முக்கியம்? நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் உள்ள ஒருவர் நாளொன்றுக்கு எட்டு, பத்து மருந்துகள் வரை உட்கொள்ளக்கூடும்; அவற்றின் அளவுகள், ஒன்றோடொன்று வினை புரிதல், பக்கவிளைவுகள் ஆகியவற்றை நிபுணரின் கண் கவனிக்க வேண்டும். நம் அரசுக்கல்லூரிகளில் பயின்ற பார்ம்.டி. பட்டதாரிகள் வார்டு சுற்றுகளில் மருத்துவர்களுடன் நிற்கவேண்டும்; ஒவ்வொரு நோயாளியும் வீடு திரும்பும் முன் அவரது மருந்துகளைச் சரிபார்க்க வேண்டும்; நம் மருத்துவமனைகள் ஆன்டிபயாடிக் மருந்துகளை விவேகத்துடன் பயன்படுத்த உதவ வேண்டும். இதுவே மருத்துவமனை மருந்தியலின் எதிர்காலம்; அதில் தமிழ்நாடு வழிகாட்டும்.
இரண்டாவது
களம், நீங்கள் பணியாற்றும் தளம். எங்கள் அரசு நோய்த் தடுப்பைச் சுகாதாரக் கொள்கையின் மையத்தில் வைத்துள்ளது. நேர்மறை நலக் கொள்கையை (Positive Health Policy) அறிவித்துள்ளோம்; ‘நலம் 360’ மூலம் 30 வயது நிறைந்த அனைவருக்கும் ஆண்டு தோறும் இலவச உடல்நலப்பரிசோதனை வழங்க உள்ளோம். ஆனால் நோய்த் தடுப்பை மருத்துவமனைகளால் மட்டும் சாத்தியமாக்க முடியாது. அது தெருவரை செல்ல வேண்டும் — மருந்தகம் ஏற்கெனவே அந்தத் தெருவில் தான் இருக்கிறது.
ஒரு வாடிக்கையாளர் இரத்த அழுத்த மாத்திரைகளை விட்டு விட்டு வாங்குவதை கவனித்து, இரண்டு நிமிடம் ஒதுக்கிக் காரணம் கேட்கும் மருந்தாளுநர் — அது தான் நோய்த்தடுப்பு. “உடல்நிலை நன்றாக இருக்கிறது என்பதற்காக மருந்தை நிறுத்தாதீர்கள்” என்று நீரிழிவு உள்ளவருக்கு எடுத்து சொல்லும் மருந்தாளுநர் — அது தான் நோய்த்தடுப்பு.
தமிழ்நாட்டில் இன்று ஏறத்தாழ ஆறில் ஒருவர் அறுபது வயதை கடந்தவர்; அவர்களில் பலர் நாள்தோறும் பல மருந்துகளை உட்கொள்கின்றனர். ஒரே மருந்து இருமுறை சேர்வதையும் ஆபத்தான சேர்க்கைகளையும் கவனமாக சரிபார்க்கும் மருந்தாளுநர், எந்த மருத்துவமனையும் காணாத தீங்கிலிருந்து நம் முதியோரை காக்கிறார்.
உங்கள் களம், இந்த அரசு நடத்தும் இரண்டு போராட்டங்களின் முன் வரிசையும் கூட. முதலாவது — போதை பொருளுக்கு எதிரான போராட்டம். தமிழ்நாடு முதல-அமைச்சர், போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை இந்த அரசின் முதல் இலக்குகளில் ஒன்றாக்கினார்கள். உரிய மருந்து சீட்டு இல்லாமல் போதை தரும் மாத்திரையை விற்க மறுக்கும் ஒவ்வொரு முறையும், ஒரு மருந்தாளுநர் ஒரு விற்பனையை இழக்கலாம் — ஆனால் ஓர் இளம் உயிரைக்காக்கக் கூடும். அந்த “முடியாது” என்ற சொல்லை சொல்லும் ஒவ்வொரு மருந்தாளுநரையும் பாராட்டுகிறேன். இந்த அரசு உங்களுக்குத் துணை நிற்கிறது.
இரண்டாவது — கிருமிகள் மருந்துகளுக்கு எதிர்ப்புத்திறன் பெறுவதற்கு (Antimicrobial Resistance) எதிரான போராட்டம். உலகிலேயே அதிக அளவில் ஆன்டிபயாடி மருந்துகளை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் வேகத்தை விட, கிருமிகள் நம்மருந்துகளைஎதிர்க்கக்கற்றுக் கொள்ளும் வேகம் அதிகம். மருந்துச்சீட்டு இல்லாமல் விற்கப்படும் ஆன்டி பயாடிக், வாடிக்கையாளருக்குச் செய்யும் சேவை அல்ல; அது நம்கு ழந்தைகளின் எதிர்காலத்திடமிருந்து வாங்கப்படும் கடன். “மருந்துச் சீட்டு இல்லையேல் ஆன்டிபயாடிக் இல்லை” — இதுவே தமிழ்நாட்டின் ஒவ்வொரு மருந்தகத்திலும் விதியாகட்டும்.
மூன்றாவது — கண்ணியம். ஒரு தொழில் மதிப்பைப் பெறுவது இரண்டு வழிகளில்: சமூகம் அதை அங்கீகரிக்கும் போது; அந்த தொழில் தனக்கென உயர்ந்த தரத்தை வகுத்துக் கொள்ளும் போது. முதலாவது எங்கள் கடமை; இரண்டாவது உங்கள் கடமை. மருத்துவரின் வெள்ளை அங்கிக்கு உள்ள அதே நம்பிக்கை மருந்தாளுநரின் வெள்ளை அங்கிக்கும் இருக்க வேண்டும்.
இங்கு வந்திருக்கும் மாணவ செல்வங்களே மிகச்சிறந்த கால கட்டத்தில் இந்தத் தொழிலுக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். இன்றைய மருந்தியல் மருத்துவ மருந்தியல், மருந்துக் கண்காணிப்பு (Pharmacovigilance), ஒழுங்கு முறை அறிவியல், தர உறுதி, உயிரியல் மருந்துகள், டிஜிட்டல் சுகாதாரம், ஆராய்ச்சி என விரிந்து நிற்கிறது. இவை அனைத்திலும் தமிழ்நாட்டுக்கு நீங்கள் தேவை.
நம் மருத்துவமனைகளில், ஆய்வகங்களில், தொழிற்சாலைகளில், ஒழுங்கு முறைப் பணிகளில். ஆழமாக கற்றுக்கொள்ளுங்கள்; ஆர்வத்தை இழக்காதீர்கள்; நேர்மையில் ஒரு போதும் சமரசம் செய்யாதீர்கள். மாத்திரை அட்டையில் உங்கள் பெயரை நோயாளி ஒருபோதும் பார்க்கப்போவதில்லை ஆனால் ஒவ்வொரு மாத்திரையிலும் உங்கள் நேர்மை இருக்கும்.
ஒவ்வொரு மருந்தும் பாதுகாப்பானதாக, ஒவ்வொரு நோயாளியும் தன்கையிலுள்ள மருந்தை புரிந்து கொண்டவராக, ஒவ்வொரு மருந்தாளுரும் தம் உயிர்காக்கும் பணிக்காக மதிக்கப்படுபவராக — அத்தகைய தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, இந்திய மருந்தியல் கவுன்சில் தலைவர் மொண்டுகுமார் எம் பட்டேல், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் புஷ்கலா, தமிழ்நாடு மருந்தியல் கவுன்சில் தலைவர் ஜெயசீலன், பதிவாளர் தமிழ்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.