திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சியில் ஆய்வுக் கூட்டம்

திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு ஜி.எஸ்.சமீரன் அறிவுறித்தியுள்ளார்.
திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சியில் ஆய்வுக் கூட்டம்
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

இன்று (25.07.2026) மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

அபராதம் விதித்து நடவடிக்கை

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பணிகளை ஆய்வு செய்து பேசும்போது தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். பெருமளவு திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள், அபாயகரமான கழிவுகளை தனித்தனியே பிரித்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதைப்போல. குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலிருந்தும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதற்கு உரிய விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும், கட்டட இடிபாட்டுக் கழிவுகளை முறையாக அகற்றி மறுசுழற்சிக்குட்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனத்தினர் பின்பற்றிடவும், மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும். சாலைகள், தெருக்கள், பேருந்து நிறுத்தங்கள், மயானபூமி, பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் தூய்மைப் பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் இரவு நேரங்களில் இயந்திரப் பெருக்கிகளைப் பயன்படுத்தி தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பணிகளை விரைவுபடுத்த வேண்டும்

கொடுங்கையூர்,பெருங்குடி குப்பை கிடங்குகளில் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றிடும் பணியினை தொடர்ந்து கண்காணித்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவுப் பணிகளை அலுவலர்கள் கண்காணித்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், காணொலி காட்சியின் வாயிலாக வட்டார துணை ஆணையாளர்கள் ஸ்வேதா சுமன், (வடக்கு), எச்.ஆர்.கௌஷிக், (மத்தியம்), அதாப் ரசூல், (தெற்கு), தலைமைப் பொறியாளர் பாலமுரளி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com