மணல் குவாரிகளில் மெகா ஊழல்: துரைமுருகனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அதிமுக பரபரப்பு புகார்

தமிழக மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் அதிமுக புகார் கொடுத்துள்ளது.
மணல் குவாரிகளில் மெகா ஊழல்: துரைமுருகனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அதிமுக பரபரப்பு புகார்
Published on

சென்னை,

லஞ்ச ஒழிப்பு துறையில் அதிமுக சட்டப் பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன் கொடுத்துள்ள புகார் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2024 ஜூன் 13-ம் தேதி அமலாக்கத்துறை அனுப்பிய அதிகாரப்பூர்வ ஆவணங்களின் அடிப்படையில் தமிழக மணல் குவாரிகளில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. அதாவது, தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2023 வரை 28 குவாரிகளில் மணல் அள்ளும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இதில் சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அதிகாரிகள் சாதகமாக செயல்பட்டுள்ளனர்.

அதன்படி, சுரங்கவிதிகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களும் மீறப்பட்டுள்ளன. இதற்கு துறையின் அதிகாரிகள் உடந்தையாக இருப்பது தெளிவாகிறது. ஆற்றாங்கரை மணல், ஜல்லி மற்றும் கல் குவாரிகளில் சட்டவிரோத சுரங்கம் மற்றும் கூடுதல் கட்டணம் வசூலித்ததை அமலாக்கத்துறை உறுதி செய்திருக்கிறது. குறிப்பாக, ஐஐடி கான்பூர் தொழில்நுட்பக் குழுவினர் ட்ரோன்கள் மூலம் நடத்திய ஆய்வில், அனுமதிக்கப்பட்ட அளவை விட 21 மடங்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் முடக்கப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு பலன் கிடைத்துள்ளது. வெறும் 4.90 ஹெக்டேர் பரப்பளவில் மணல் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, சட்டவிரோதமாக 987.01 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கணக்குகளில் மணல் விற்பனை மூலம் வெறும் ரூ.36.45 கோடி மட்டுமே வருவாய் காட்டப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் சுமார் ரூ.4,730 கோடி மதிப்பிலான மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த மெகா ஊழலில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துறையின் முதன்மைப் பொறியாளர், மணல் குவாரி கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் குறிப்பிட்ட சில தனியார் ஒப்பந்ததாரர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

மணல் குவாரிகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களின் வேலை நேரத்தை ஆய்வு செய்ததில், விதிகளை மீறி 24 மணி நேரமும் மணல் அள்ளப்பட்டது ஜிபிஎஸ் தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சட்டவிரோத மணல் கொள்ளை என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் திருட்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்த ஊழல் தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். தாமதம் செய்தால் ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நீர்வளத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com