கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் மெகா ஊழல் - அமைச்சர் குற்றச்சாட்டு

கோவை பெரியார் அறிவுலகத்தில் மொத்தம் 7 தளங்கள் உள்ளன.
கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் மெகா ஊழல் - அமைச்சர் குற்றச்சாட்டு
Published on: 

சென்னை,

பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

பெரியார் அறிவுலகம் திறப்பு

கோவை காந்திபுரத்தில் தி.மு.க. ஆட்சியில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டது. த.வெ.க. ஆட்சி அமைந்ததை தொடர்ந்து பெரியார் அறிவுலகத்தை கடந்த மாதம் முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய டிஜிட்டல் நூலகம், சர்வதேச மின் நூல்கள், கணினி வசதிகள் மற்றும் அறிவியலை நேரடியாகக் கற்று உணரக்கூடிய அறிவியல் மையம், கோளரங்கம் ஆகியவையும் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மொத்தம் 7 தளங்கள் உள்ளன. பெரியார் நூலகத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் புத்தகங்கள் இடம் பிடித்துள்ளன.

ரூ.350-க்கு விற்கும் நிலையில்...

இந்த நிலையில், பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், புத்தகங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். அதில், யாரும் அறியாத ‘அகல் விளக்கு’ என்ற பதிப்பகத்தின் பெயரில் அச்சிடப்பட்ட 1,800 புத்தகங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும், நாலடியார் நூல்களை மற்ற பதிப்பகங்கள் ரூ.350-க்கு விற்கும் நிலையில், சூர்யா பாலு என்ற பெயரில் எழுதப்பட்ட ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ என்னும் முந்நூறு பக்க நூலை ரூ. 1,445-க்கு வாங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த பதிப்பகத்தின் ஒரு நூலில் மதுரைக் காஞ்சியை எழுதியவர் மதுரைக் கூழத்திப் பெருவழதி என தவறாக உள்ளது என்றும், இன்னொரு நூலில் கீழடியில் கிடைத்த சிற்பம் என நந்தியின் புகைப்படம் உள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். பல நூல்களில் குறிப்புகள் தவறாக இருப்பதாகவும், நூல்களை விநியோகித்ததில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

உடனடியாக நடவடிக்கை

கோடிக்கணக்கில் ஊழல் செய்தது யார்? என்று கேள்வி எழுப்பிய அவர், ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்மோகன், எழுத்தாளர் பெருமாள் முருகனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாக பேசினார்.

திமுக ஆட்சியின் மெகா ஊழல்

அப்போது அவர் கூறியதாவது:-

கோவையில் பெரியார் அறிவுலகம் திறந்து வைக்கப்பட்டது. பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். அதை படிக்கும்போதும் ஒரு பக்கம் வேதனையாகவும் ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது. நானும் ஒரு வாசகர் தான்.

அந்த பெரியார் அறிவுலகத்திலிருக்கும் புத்தகத்தின் பெயர்கள் எல்லாம் என் வாழ்நாளிலேயே கேள்விப்பட்டதில்லை. அதில் ஒரு பதிப்பகத்தில் 1,500 நூல்கள் வாங்கியுள்ளனர். அப்படியொரு பதிப்பகம் செவ்வாய் கிரகத்திலேயே இல்லை. கடந்த ஆட்சியில் பிப்ரவரி மாதமே புத்தகங்களை வாங்கியுள்ளனர். இது திமுக ஆட்சியில் நடந்திருக்கும் மெகா ஊழலின் எடுத்துக்காட்டு.

விசாரணை தொடக்கம்

பெரியார் பெயரிலேயே ஊழல் செய்தது வெட்கமாக இல்லையா? அதில் யாரென்றே தெரியாத ஒரு எழுத்தாளர் பெயரில் கீழடி குறித்து புத்தகம். அதில், கீழடியிலிருந்து எடுக்கப்பட்ட சிற்பம் என்று கூகுளிலில் இருந்து படங்களை எடுத்துள்ளனர். அப்படியொரு சிலையே கீழடியில் இல்லை. பாரதியாரின் கதைகள் என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளனர். நல்லவேளை அந்த கதையெல்லாம் படிக்காமல் பாரதியார் இறந்துவிட்டார். பத்தாம் வகுப்பு மாணவர்கூட நன்றாக எழுதுவார்.

இந்த ஊழல் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களோ அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

X