

சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“கர்நாடக அரசின் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், 'காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் விரைவில் தாக்கல் செய்து, அனுமதி பெற்று மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டுவோம்' என்று கூறியிருக்கிறார்.
இதை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்க கூடாது. இது தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சினை. 20 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா மாவட்டங்களின் விவசாயத்தின் அடித்தளமாகவும் இருப்பது காவிரி நீர்தான்.
தமிழகத்தின் உரிமைகளை அபகரிக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கையும், அதை தடுத்த நிறுத்தத் தவறிய மத்திய அரசின் துரோகத்தையும் தமிழர்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, மேகதாது அணை கட்டுவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதத்தையும், மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் திருவாரூரில் வரும் 31-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதேபோல, கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.