மேகதாது விவகாரம்: கர்நாடக முதல்-மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

டி.கே. சிவக்குமார், உண்மைக்கு மாறான தகவலை பரப்பி தமிழக மக்களிடையே பீதியை கிளப்பி வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேகதாது விவகாரம்: கர்நாடக முதல்-மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Published on: 

சென்னை,

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை' என்று கூறியுள்ள கர்நாடக மாநில முதல்-மந்திரிக்கு, பதில் அளிக்காமல் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசின் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கூட்டணி அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

காவிரியில் தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட புரட்சி தலைவர், புரட்சித் தலைவி அம்மா, தொடர்ந்து அம்மாவின் அரசு சுப்ரீம்கோர்ட்டில் பல சட்ட போராட்டங்களை நடத்தியது. அதன் விளைவாக, அனைத்துத் தாப்பு வாதங்களையும் கேட்டறிந்த சுப்ரீம்கோர்ட்டு காவிரி பிரச்சனையில் தனது இறுதி தீர்ப்பினை வழங்கியது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டு, கர்நாடக அரசு காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ் நாட்டிற்கு உரிய பங்கு நீரை திறந்துவிடும் அளவையும் வெளியிட்டது.

தெளிவான தீர்ப்பு

மேலும்

  • ”பன்மாநில நதிகள் தேசிய சொத்து எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது" என்ற நவம்பர், 1991-ம் ஆண்டைய சுப்ரீம்கோர்டின் கருத்து, இத்தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • சுப்ரீம்கோர்ட்டு அனைத்து மாநிலங்களின் வாதங்களையும் முழுமையாக கேட்டறிந்த பின்னர், கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேல்படுகை மாநிலங்கள் எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தெளிவான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

மத்திய அரசு

இந்நிலையில், கர்நாடக மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதைக் கண்டித்து. 'கர்நாடக அரசு மேகதாது திட்டத்தை செயல்படுத்தக் கூடாது' என்ற தமது நிலைப்பாட்டை சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புக்கு முன்னரும் பின்னரும் 25.2.2017, 27.2.2017, 4.9.2018, 8.10.2018 மற்றும் 22.11.2018 ஆகிய நாட்களில் பாரத பிரதமர் அவர்களுக்கு கடிதங்கள் மூலமாகவும், நேரடியாக சந்தித்தும், மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தினேன்.

இந்நிலையில், கர்நாடக முதல்- மந்திரி டி.கே.சிவக்குமார் அவர்கள் மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை' என்று கூறியதாக, நாளிதழ் மற்றும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேகதாது அணை

காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆறு மாதமாக காவிரியில் நமக்குரிய பங்கு நீரை திறந்துவிட உத்தரவிட்ட பிறகும், கர்நாடக அரசு தொடர்ந்து அதனை நிறைவேற்றாததுடன், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும் இதற்கு சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்துவிட்டதாகவும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் அவர்கள் உண்மைக்கு மாறான தகவலை பரப்பி தமிழக மக்களிடையே பீதியை கிளப்பி வருகிறார்.

வாடகைக்கால் கூட்டணி

ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி அதை உண்மையாக்கிவிடலாம் என்ற தத்துவத்தை கடைபிடிக்கும் கர்நாடக முதல்-மந்திரிக்கு பதில் அளிக்க வக்கில்லாமல் வாய்மூடி மவுன சாமியாராக, தமிழ் நாட்டின் உரிமைகளை காக்காமல் இருக்கும் வாடகைக்கால் கூட்டணி அரசின் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X