மேகதாது தனித்தீர்மான விவகாரம்: உதயநிதி கோரிக்கையை உடனே ஏற்ற முதல்-அமைச்சர் விஜய்!

எதிர்க்கட்சி தலைவரின் கருத்தினை கூடுதலாக சேர்க்கலாம் என பேரவை தலைவரிடம் முதல்-அமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டார்.
உதயநிதி கோரிக்கை, உடனே ஏற்ற விஜய்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று மேகதாது அணைக்கு எதிரான அரசினர் தனித்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று அமைச்சர்கள் ராஜேஷ்குமார், வன்னியரசு, உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு ), நித்யானந்தம் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), பிரேமலதா விஜயகாந்த் (தே.மு.தி.க.), ஆர்.செல்லசுவாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ராஜேந்திரன் (ம.தி.மு.க.), சவுமியா அன்புமணி (பா.ம.க.), எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.), எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் (தி.மு.க.) ஆகியோர் பேசினார்கள்.

அனைவரும் அரசினர் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

நிறைவாக, முதல்-அமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசின் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு கருத்து தெரிவித்து அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது, அரசின் தனித்தீர்மானத்தில் ஒரு கருத்தை சேர்க்க கோரியுள்ளார்.

தனி நடுவர் மன்றம்

அதுகுறித்து, கீழ்கண்ட கருத்தினை பேரவைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். மேகதாது அணை சம்பந்தமாக எனது தலைமையில் 26-5-2026 அன்று மேகதாது பிரச்சினைக்காக பிரத்யேகமாக தனி நடுவர் மன்றம் அமைப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து தனி நடுவர் மன்றம் அமைக்க ஏற்கனவே தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, எதிர்க்கட்சி தலைவரால் அளிக்கப்பட்ட கருத்தினை 4-வது பத்திக்கு அடுத்து கூடுதலாக சேர்க்கலாம் என பேரவை தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தனித்தீர்மானம் நிறைவேற்றம்

பின்னர், திருத்திய தனித்தீர்மானத்தின் மீது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் குரல் வாக்கெடுப்பு நடத்தினார். அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com