நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 16-வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு


நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 16-வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு
x

நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 16-வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

சென்னை,

மத்திய அரசின் 16-வது நிதிக்குழு அதன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் தமிழ்நாட்டுக்கு நேற்று முன்தினம் வந்தது. 11 உறுப்பினர்கள் அடங்கிய இந்த குழுவினர் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினர். இதையடுத்து நேற்று தமிழக அரசுடன் நிதிக்குழு ஆலோசனை கூட்டம் நடத்தியது.

அப்போது வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு வரி வருவாயில் 50 சதவீத பங்கு வழங்க வேண்டும் என்று மத்திய நிதிக்குழுவிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 16-வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ஆலையில் இருந்து நாளொன்றுக்கு எவ்வளவு குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது, ஆலையின் செயல்பாடுகள், ஆலையின் விரிவாக்க பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என அதிகாரிகளிடம் நிதிக்குழுவினர் கேட்டறிந்தனர்.

பிற்பகல் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்கின்றனர். பிற்பகல் மதுரை விமான நிலையத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு கார் மூலம் செல்கின்றனர். அங்கு இரவு ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். நாளை (புதன்கிழமை) காலை தங்கச்சிமடம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்ட பணிகளை பார்வையிடுகின்றனர். பின்னர் ராமநாதபுரம் நகராட்சியை பார்வையிட்டுவிட்டு, பிற்பகலில் கீழடி அகழ்வாராய்ச்சியை ஆய்வு செய்கின்றனர். அதைத்தொடர்ந்து மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர்.

1 More update

Next Story