அமெரிக்க அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சென்னை அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்


அமெரிக்க அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சென்னை அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2026 11:11 AM IST (Updated: 5 Jan 2026 11:57 AM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வெனிசுலா நாட்டின் அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து பல நாட்டு தலைவர்களும் தங்களது கண்டத்தை தெரிவித்தனர். அந்த வகையில் வெனிசுலாவில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் கவலையளிப்பதாக இந்திய அரசு தெரிவிதிருந்தது.

இந்த நிலையில், வெனிசுலா அதிபர் மதுரோவை அந்நாட்டிற்குள் புகுந்து அராஜகமாகப் பிடித்துள்ள அமெரிக்காவின் நடவடிக்கையைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன், ஜி.செல்வா, எம். ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திடீரென அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story