மாயக்காள் உட்பட 17 தியாகிகளின் நினைவு தினம்: டிடிவி தினகரன் டுவிட்

பெருங்காமநல்லூர் தியாகிகளின் தியாகத்தை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மாயக்காள் உட்பட 17 தியாகிகளின் நினைவு தினம்: டிடிவி தினகரன் டுவிட்
Published on

சென்னை,

ஆங்கிலேயர்கள் இந்தியர்களை ஒடுக்க பயன்படுத்திய மிக கொடூரமான ஆயுதம் குற்றப்பரம்பரை சட்டம் இச்சட்டத்தின்படி, குறிப்பிட்ட சில சமூகத்தில் பிறந்தாலே அவர்கள் பிறவி குற்றவாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் உள்ள ஆண்கள் அனைவரும் தினமும் காவல் நிலையம் சென்று தங்களின் கைரேகையை வைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இரவில் காவல் நிலையத்திலேயே படுத்து உறங்க வேண்டும். சொந்த ஊருக்குள்ளேயே கைதிகள் போல நடத்தப்பட்ட இந்த அடிமைத்தனத்தை எதிர்த்து பெருங்காமநல்லூர் மக்கள் கொதித்தெழுந்தனர்.

அப்போது ஆங்கிலேய அரசு இந்த போராட்டத்தை ஒடுக்க போலீஸ் படையை அனுப்பியது. துப்பாக்கிகளோடு வந்த போலீஸாரை கண்டு மக்கள் பயப்படாமல் கையில் கிடைத்த வேல்கம்புகள், கற்கள் மற்றும் கோடாரிகளுடன் எதிர்த்து நின்றனர். இந்த நிலையில் ஆங்கிலேய தளபதியின் உத்தரவின்படி, போலீஸ் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் முதல் பலியாக மாயக்காள் சரிந்து விழுந்தார். அவரை தொடர்ந்து 16 பேர் ரத்த வெள்ளத்தில் உயிர்ழந்தனர்.

இந்நிலையில் மாயக்காள் நினைவு தினத்தையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

உலகளவில் இயற்றப்பட்ட கொடூரமான சட்டங்களில் ஒன்றான குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து கிளர்த்தெழுந்த போராட்டத்தில் ஆங்கிலேயப்படைகளால் சுட்டு கொலை செய்யப்பட்ட பெருங்காமநல்லூரை சேர்ந்த மாயக்காள் உட்பட 17 தியாகிகளின் நினைவு தினம்.

பிறப்பின் அடிப்படையில் தங்களை குற்றவாளி என தீர்மானிக்கும் மக்கள் விரோத குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த பெருங்காமநல்லூர் தியாகிகளின் தியாகத்தை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com