பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை: முடிவை தெரிவிக்க அரசுக்கு கெடு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் கொள்கை இல்லை.
மதுரை ஐகோர்ட்டு
கோப்புப்படம்
Published on

மதுரை,

பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை வழங்குவது குறித்து வருகிற 17-ந்தேதி அரசின் முடிவை தெரிவிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கெடு விதித்ததுடன் தவறினால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

மாதவிடாய் கால விடுமுறை

மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் பணியாற்றும் பெண்கள், கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்படுகின்றனர். அதனை சமாளித்தபடியே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, தமிழகத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் கொள்கை இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதுசம்பந்தமாக பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நல பிரச்சினைகள், ஊதிய இழப்பு மற்றும் பணியிட சிரமங்கள் குறித்து விளக்கி தமிழக அரசுக்கு விரிவான மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. மாதவிடாய் என்பது இயற்கையான உயிரியல் செயல்முறை. எனவே தமிழகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால ஊதிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை அரசு உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது.

கொள்கை முடிவு

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, தற்போது தமிழக சட்டசபை நடந்து வருகிறது. இதனால் இந்த விவகாரத்தில் கொள்கை சார்ந்த முடிவு எடுப்பதற்கு தாமதம் ஆகிறது. இதற்கு உரிய அவகாசம் வேண்டும் என்றார்.

முடிவை தெரிவிக்க கெடு

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு வருகிற செப்டம்பர் 17-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் இந்த விவகாரத்தில் இறுதியான முடிவை அரசு தெரிவிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தவறும் பட்சத்தில் இந்த வழக்கில் உரிய உத்தரவை பிறப்பிப்போம் என்று அறிவுறுத்தி விசாரணையை ஒத்திவைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com