

திருவாரூர்,
திருவாரூரில் திருமண விவகாரம் தொடர்பாக பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பட்டதாரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் வடக்கு வீதியில் சைக்கிள் கடை நடத்தி வருபவர் குமார். இவர் தனது சைக்கிள் கடையின் மாடியில் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். ஒரு மகன் திருமணம் ஆகி தனி குடித்தனம் சென்றுள்ளார். குமாரின் மகள் ஸ்ரீலேகா (வயது 24). இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீலேகா நேற்று காலை மாடியில் இருந்து கீழே இறங்கி சைக்கிள் கடையின் பின்புறம் உள்ள ஒரு அறையில் சைக்கிள் கடையில் வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு தனக்குத் தானே தீக்குளித்தார். தீயின் வேதனை தாங்காமல் அவர் சத்தம் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த குமார், தனது மகளை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. ஸ்ரீலேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பலத்த தீக்காயம் அடைந்த குமார் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட ஸ்ரீலேகாவுக்கு, மயிலாடுதுறையை சேர்ந்த ஒருவருடன் திருமண செய்ய முடிவு செய்யப்பட்டு நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. பின்னர் சில காரணங்களால் ஸ்ரீலேகாவின் பெற்றோர், தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க முயன்றுள்ளனர்.
இதில் ஸ்ரீலேகாவிற்கும், அவரது பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த ஸ்ரீலேகா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.