

ராயபுரம்,
சென்னை டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கு தொடர்பாக புனே சிறையில் இருந்த கூலிப்படை தலைவனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுட்டுக்கொலை
சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் பாபுசிங் (வயது 50). சவுகார்பேட்டையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த ஆண்டு பாபுசிங் அவருடைய அலுவலக வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜூலியஸ் சீசர், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில், பாபுசிங்கின் சொந்த ஊர் ராஜஸ்தான் என்பதும், அங்கு முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டுக்காரரான ராம்சிங் (52) கூலிப்படையை ஏவி பாபுசிங்கை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராஜஸ்தான் விரைந்த போலீசார், ராம்சிங்கை கைது செய்தனர்.
கூலிப்படை தலைவன்
மேலும் இந்த கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த ராகேஷ் (26), சிதம்பர் (29), பிரசாந்த் (27), சுபாஷ் (28) ஆகியோரை மராட்டியம், ராஜஸ்தானில் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு சதித்திட்டம் தீட்டி, கொலையாளிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கிய கூலிப்படை தலைவனான மராட்டிய மாநிலம் புனே நகரை சேர்ந்த பாரூக்கை (35) போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் பாரூக் ஒரு குற்ற வழக்கில் புனே சிறையில் இருப்பது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் சிறையில் இருந்த பாரூக்கை, டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் 8 நாட்கள் விசாரிக்க போலீசார் அனுமதி பெற்றனர். அதன்படி பாரூக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.