

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் மீனவர்களின் மீன்பிடி வலைகளை வணிகக் கப்பல் ஒன்று சேதப்படுத்திய சம்பவம் உள்ளூர் மீனவர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல் கடந்த 7-ந்தேதி அன்று கடலுக்குச் சென்று, கரையில் இருந்து சுமார் ஏழரை கடல் மைல் தொலைவில் தங்களது நாட்டுப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் பரப்பி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலைகளின் மீது, அந்த வழியாக வந்த 'சீ ஏஞ்சல்' என்ற பிரம்மாண்ட வணிகக் கப்பல் ஒன்று ஏறிச் சென்றுள்ளது.
ராட்சத கப்பலின் அடியில் சிக்கி இழுக்கப்பட்டதால், மீனவர்களின் வாழ்வாதாரமான சுமார் ரூ.1.10 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் முற்றிலும் கிழிந்து நாசமாகின.
தங்கள் கண் முன்னாலேயே வலைகள் சேதமடைவதைக் கண்ட மீனவர்கள், தங்களது சிறிய படகுகளில் இருந்தபடியே கப்பலை நோக்கி கத்தியும், சைகைகள் காட்டியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். எனினும், அந்த வணிகக் கப்பல் நிறுத்தப்படாமல் தனது பயணத்தை தொடர்ந்து சென்றது.
கடலின் நடுவே தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மீனவர்கள், கப்பலை நோக்கி குரல் எழுப்பி போராடிய காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, கடலோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையை ஒட்டி மீனவர்கள் மீன்பிடிக்கும் போது, இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் கடலோர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.