பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு கருணை படி என்பது சலுகைதான்; உரிமை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு

மத்திய அரசின் தபால் துறையில், கடந்த 1996-ம் ஆண்டு பணியில் சேர்ந்த தபால்காரர் பழனி என்பவர், 2010-ம் ஆண்டு முதல் பணிக்கு வரவில்லை.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு கருணை படி என்பது சலுகைதான்; உரிமை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

மத்திய அரசின் தபால் துறையில், கடந்த 1996-ம் ஆண்டு பணியில் சேர்ந்த தபால்காரர் பழனி என்பவர், 2010-ம் ஆண்டு முதல் பணிக்கு வரவில்லை. அவருக்கு பலமுறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியும் வராததால். துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதற்கும் அவர் ஆஜராகாததால், 2014-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதன்பின்னர் 2 ஆண்டுகள் கழித்து, 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதால், ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை கருணை படியாக வழங்கக்கோரி அதிகாரிகளுக்கு பழனி மனு அனுப்பினார். அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததையடுத்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம், அவருக்கு கருணை படி வழங்கும்படி உத்தரவிட்டது.

கருணை படி

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தபால் துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் ஆகியோர், "பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு கருணை படி வழங்குவது குறித்து அதிகாரிகள் தான் பரிசீலிக்க வேண்டும். அது சலுகைதானே தவிர உரிமை இல்லை. அதனால் கருணை படி வழங்கும்படி தீர்ப்பாயம் உத்தரவிட முடியாது. அப்படி உத்தரவு பிறப்பித்தால், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கும் கருணை படி வழங்க வேண்டும் என்று வரக்கூடும். அதனால், மத்திய நிர்வாக தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com