அர்னாப் புயல் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அர்னாப் புயலின் மையப்பகுதி கரையை முழுவதும் கடக்க ஏறக்குறைய 1 மணிநேரம் எடுத்தது.
அர்னாப் புயல் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Published on: 

சென்னை,

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன் தினம் நிலவிய அர்னாப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று நேற்று முன் தினம் மாலை 5.30 அளவில் தீவிர புயலாக மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று நேற்று முன் தினம் இரவு 11.30 மணி அளவில் மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் நிலவியது.

அதன் பிறகு, அர்னாப் புயல் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் ஆந்திராவின் காகிநாடா மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடற்கரை பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே யானம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியது. அதன் மையப்பகுதி கரையை முழுவதும் கடக்க ஏறக்குறைய 1 மணிநேரம் எடுத்தது.

புயல் கரையைக் கடக்கத் தொடங்கியவுடன் ஆந்திரம், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் இரவு விடியவிடிய பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. காகிநாடா நகரில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால், வாகன போக்குவரத்து எதுவுமின்றி சாலைகள் வெறிச்சோடி இருந்தன.

இந்த நிலையில், நரசாபூர - காக்கிநாடா இடையே யானம் அருகே அதி தீவிர புயலாக 'அர்னாப்' முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடந்த சமயத்தில் மணிக்கு 125 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதாகவும், தற்போது சற்று வலுவிழந்து தீவிர புயலாக மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் தாக்குதலையொட்டி, ஆந்திராவிலும், ஒடிசாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆந்திர அரசு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி உள்ளது. 1,351 கர்ப்பிணி பெண்கள், ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com